Homeசெய்திகள்தமிழ்நாடுஊதாரித்தனமாகவும் திட்டமிடாமலும் செயல்படும் திறமையற்ற அரசு!” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

ஊதாரித்தனமாகவும் திட்டமிடாமலும் செயல்படும் திறமையற்ற அரசு!” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஒரே நாளில் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் வியூக வகுப்பாளர்கள் மூன்று பேர் தமிழக அரசை வழிநடத்துவதாகவும், முதலமைச்சருக்கு ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் நடைபெற்ற பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் அதிமுகவின் சாதனை!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் குறித்துப் பேசிய அவர், வறட்சியான பகுதியாக இருந்த இந்தப் பகுதி தற்போது பசுமையாகக் காட்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். சுமார் 1,000 அடி ஆழத்தில் போர்வெல் அமைத்தும் தண்ணீர் கிடைக்காத நிலை மாறி, விவசாயம் செழிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

50 ஆண்டுகால மக்களின் கோரிக்கையை அதிமுக ஆட்சியில் ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கீட்டில் நிறைவேற்றியதாகவும், இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடி செலவில் 8,000 ஏரிகள் தூர்வாரப்பட்டு, வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

467 தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகக் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ஏற்கனவே இயங்கி வந்த தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவற்றின் செயல்பாடுகள் முடங்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

தேவையற்ற தலையீடுகள் மற்றும் இடையூறுகள் காரணமாக புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வரத் தயங்குவதாகவும், அண்டை மாநிலங்களுக்குத் தொழில் முதலீடுகள் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் புகார்!

மின்சாரக் கொள்முதல் விவகாரம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியில் மின் கொள்முதலில் முறைகேடு இருப்பதாகக் கூறி பல திட்டங்களை தற்போதைய அரசு ரத்து செய்ததாகத் தெரிவித்தார்.

ஆனால், அதற்குப் பதிலாக 2,100 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.41.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். ஒரு யூனிட் ரூ.20-க்கு மின்சாரம் வாங்கியதில் தவறு இருப்பதாகக் கூறியவர்கள், ரூ.41.50-க்கு கொள்முதல் செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

மின் கொள்முதலில் 100 சதவீதம் அளவுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே ரூ.2.58 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் கூறப்படும் மின்துறை, மேலும் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கினால் எப்படிச் செயல்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்தப் பகுதியில் தினமும் சுமார் 15 முறை மின்வெட்டு ஏற்படுவதாகவும், இதனால் தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனம்!

தற்போதைய ஆட்சியில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், ஒரே நாளில் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நூற்றுக்கணக்கான கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

போதைப்பொருள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

மேலும், முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்றும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயங்குவதாகவும் குற்றம்சாட்டினார். காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார்.

3 தேர்தல் வியூக வகுப்பாளர்கள்தான் ஆட்சியை நடத்துகின்றனர்!

துணை சபாநாயகர் தொடர்பான சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு ஆட்சி நடத்துவது எப்படி என்று தெரியாமல் செயல்படுவதாக விமர்சித்தார்.

ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் 30 முதல் 40 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவசாலிகளை ஆலோசகர்களாக நியமிப்பது வழக்கம் என்றும் தெரிவித்தார்.

ஆனால், தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வியூக வகுப்பாளர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், ஆட்சி அமைந்தவுடன் ஜோதிடரையும் நியமித்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் வியூக வகுப்பாளர்கள் மூன்று பேர் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகவும், தேர்தல் அனுபவம் இருப்பவர்களுக்கு ஆட்சி நிர்வாக அனுபவம் இருக்காது என்றும் விமர்சித்தார்.

முதலமைச்சருக்கு ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும், இந்த மூன்று பேரின் ஆலோசனையின்படி அரசு செயல்படுவதால்தான் நிர்வாகத்தில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

பெரியார் அறிவுலகம் விவகாரம்: விசாரணை நடத்தக் கோரிக்கை!

கோவை பெரியார் அறிவுலகம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடத்தை தவெக அரசு அவசர அவசரமாகத் திறந்து வைத்ததாகவும், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் உள்ளிட்டவற்றை முறையாக ஆய்வு செய்த பிறகே திறந்திருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.

மேலும், பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும் அரசு, தொழில் நிறுவனங்களுக்குத் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்தும் கேள்வி!

தொடர்ந்து, விவசாயிகளுக்கு அறிவித்தபடி பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் தற்போதைய அரசு ஏமாற்றிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி நிரந்தரமானதா என்பது தெரியவில்லை என்றும், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதாகவும் விமர்சித்தார்.

அத்திக்கடவு திட்டக் குளத்தைப் பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி!

செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, குன்னத்தூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் மூலம் நீர் நிரம்பியுள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான பெரிய குளத்தை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகளிடம் நீர்வரத்து குறித்து கேட்டறிந்தார். இந்தக் குளத்தின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குளத்தின் கரையில் நின்றபடி பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மீண்டும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவரது இந்தப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” – தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

MUST READ