திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட போதாவூரில் விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் கழுத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மாவட்டத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்
போதாவூரைச் சேர்ந்த பாண்டியன் (48) விவசாயம் செய்து வந்தார். இவருக்கு ரேணுகா, அஞ்சலை என இரண்டு மனைவிகளும், மூன்று மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு பாண்டியன் போதாவூரிலிருந்து புலியூர் மாரியம்மன் கோவிலை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது போதாவூர் மேலத்தெரு அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்தில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தக் கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10 நாட்களில் அடுத்தடுத்து 5 கொலைகள்
திருச்சி மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி, 2 பவுன் நகைக்காக 75 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள், 8ஆம் தேதி சமயபுரம் அருகே இரண்டு சிறுவர்களும், புறத்தாக்குடி அருகே ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவரும் கொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது போதாவூரில் விவசாயி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த 10 நாட்களில் திருச்சி மாவட்டத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து நிகழும் கொலைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பயணிகள் அலறியடித்து ஓட்டம் – 2 பேர் கைது!
