நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கை தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது இறந்தவர்கள் மற்றும் இல்லாத வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் பணியில் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க படிவம் 6 (Form 6) தாக்கல் செய்தால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கம் – சர்ச்சை
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது, சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் கணக்கின்படி, இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றவர்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களும் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
தவறுகள் நடந்திருக்கலாம் – தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களின் விவரங்களை டிஜிட்டல் முறையில் கையாள்வதில் சவால்கள் இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
படிவம் 6 தாக்கல் செய்தால் வழக்கு இல்லை
எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், மீண்டும் பெயரைச் சேர்க்க படிவம் 6 தாக்கல் செய்யும்போது அவர்கள் மீது வழக்குத் தொடரப்படாது எனத் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது பெயர் விடுபட்ட காரணத்தால் படிவம் 6 தாக்கல் செய்பவர்களுக்கு இந்தப் பாதுகாப்பு பொருந்தும். அதே நேரத்தில், வேறு எந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலிலும் தங்களது பெயர் இடம்பெறவில்லை என்பதை விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் எஸ்ஐஆர் நடைமுறை
எஸ்ஐஆர் நடவடிக்கையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கவும், பெயர்களை மீண்டும் சேர்க்கவும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.
சுமார் 13 கோடி பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாத விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தப் பெயர்கள் அனைத்தும் தகுதியான வாக்காளர்களுடையவை என்றோ, அவை அனைத்தும் தவறாக நீக்கப்பட்டவை என்றோ இதுவரை நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.
எஸ்ஐஆர் நடவடிக்கையால் வாக்குரிமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!
