தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கத் தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வேலூர் அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் ஆய்வு
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனையில் உள்ள தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் மையத்தைத் திறந்து வைத்தார். மேலும், சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவக் கட்டமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலழகன், வினோத் கண்ணா, சுதாகர், சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் வார்டில் கூட்டம்; ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு
அமைச்சரின் ஆய்வின்போது குழந்தைகள் வார்டில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கட்சியினர் அதிக அளவில் வார்டுக்குள் சென்றதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவானதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், மருத்துவமனை வளாகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் வாகனங்கள் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் இடையூறாக நிறுத்தப்பட்டதால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
7 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடக்கம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தமிழகத்தில் நடப்பாண்டில் 7 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக ரூ.46.63 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.7.52 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.2.3 கோடியில் தடுப்பூசி கிடங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ரூ.1.8 கோடியில் ஆய்வக உபகரணங்களும், ரூ.1.48 கோடியில் நரம்பியல் அறுவை சிகிச்சை மையத்திற்கான உபகரணங்களும் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கும் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணை கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணிகளும் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
பறவைக் காய்ச்சலைத் தடுக்கத் தீவிர கண்காணிப்பு
கடலூர் மாவட்டத்தில் 16 கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 38 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 27 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் 23 பேருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 27 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளில் பறவைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 54 பண்ணை ஊழியர்கள் மற்றும் 21 சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். மனிதர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
2,500 மருத்துவப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மாநிலம் முழுவதும் 4,727 செவிலியர்கள் வெளிப்படையான முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருந்தாலும் சில இடங்களில் செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண்ட்லேண்ட் மற்றும் சேர்க்காடு அரசு மருத்துவமனைகளில் தேவையான பணியிடங்களை நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், எவ்வித மருந்து தட்டுப்பாடும் இல்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
புற்றுநோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய அவர், சென்னையில் புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருவதாகவும், மாநிலத்தின் நான்கு மண்டலங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என்றும் கூறினார்.
தாய்லாந்து சுகாதாரக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த ஆய்வு
தாய்லாந்து நாட்டில் செயல்படுத்தப்படும் ‘யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ்’ திட்டம் மூலம் அனைவருக்கும் மருத்துவச் சேவை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அங்கு கிராமங்கள் தோறும் சுகாதாரத் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று தொற்றுநோய் பரவலைக் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நேரில் ஆய்வு செய்ததாகக் கூறினார்.
நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தாய்லாந்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையிலான சுகாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்ற ‘பாசிட்டிவ் ஹெல்த் பாலிசி’ எனப்படும் முன்னெச்சரிக்கை சுகாதாரக் கொள்கையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தாய்லாந்தில் கற்றறிந்த நல்ல நடைமுறைகளைப் படிப்படியாக தமிழக மருத்துவத் துறையில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மருத்துவர்களின் பணித்திறனை உறுதி செய்ய புதிய கொள்கை
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மேலும், பொதுச் சுகாதாரத்துறையின் செய்தி வெளியீடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மேம்படுத்திய பின்னர் மீண்டும் வெளியிடப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
