மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருபோக பாசனத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதாகவும், இதனால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குக் குடிநீர் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இருபோக பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்துவிட்டு, மேலூர் ஒருபோக பாசன விவசாயிகளின் கோரிக்கையைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து, மேலூர் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை காந்தி அருங்காட்சியகம் முன்பிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்ற அவர்கள், தமுக்கம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தைச் சென்றடைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒருபோக பாசன விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், மேலூர் பகுதியில் விவசாயப் பணிகளைத் தொடர உடனடியாகப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலூர் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
டாஸ்மாக் கடை அகற்றம்: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கிராம மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!
