Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்து, இஸ்லாமிய வழிபாட்டு உரிமைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்து, இஸ்லாமிய வழிபாட்டு உரிமைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 150 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மாற்றி, புதிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி அளிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார். தொல்லியல் துறையின் அனுமதியுடன் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்:

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம், தமிழக அரசு, தர்கா நிர்வாகம் ஆகிய தரப்புகள் மேல்முறையீடு செய்துள்ளன. அதேபோல், தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து ராம ரவிக்குமார் என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெய்தீப் குப்தா, சேகர் நாப்டே, கோபால் சங்கரநாராயணன், பிரசாந்தோ சந்திர சென் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது, 1923-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் மலைப் படிக்கட்டுப் பகுதி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்கள் தர்காவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகும் இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

150 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மரபு என்ன?:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கோயிலில் தீபம் ஏற்றும் நடைமுறை சுமார் 150 ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், இதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோயில் அர்ச்சகர்கள் ‘தீபத்தூண்’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் தீபம் ஏற்றும் நடைமுறையை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் வாதிடப்பட்டது.

ஆண்டுதோறும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதே கோயில் அர்ச்சகர்களின் நிலைப்பாடு என்றும், கடந்த 150 ஆண்டுகளாக தற்போது சர்ச்சைக்குரியதாக உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பதற்கான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

1994-ம் ஆண்டு வழக்கையும் சுட்டிக்காட்டிய அரசு:

கடந்த 1994-ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலை மீது ஏறித் தன்னிச்சையாகத் தீபம் ஏற்றப்போவதாக அறிவித்தபோது, அது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வெளிநபர்கள் யாரும் மலை மீது ஏறித் தீபம் ஏற்றக்கூடாது என்று உத்தரவிட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் இந்து மத வழிபாட்டு உரிமை தொடர்பானது மட்டுமல்ல; இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் மத உணர்வுகளும் பாதிக்கப்படக் கூடாது என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசு தரப்பு வாதிட்டது.

சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது:

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மத ரீதியான மோதல்கள் இன்றி வழக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

குறிப்பிட்ட இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரினால், அதற்கான தெளிவான ஆதாரங்களை அவர்களே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தீபம் ஏற்றும் விவகாரத்தில் மனுதாரர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான சித்தரிப்பு என்றும், நீதிமன்றம் இதுதொடர்பாக புதிய உத்தரவைப் பிறப்பிக்கக் கூடாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், இன்னும் ஒரு வாரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளதால், தேவையற்ற சர்ச்சைகளையும் பதற்றத்தையும் தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது.

மனுதாரர்கள் தரப்பு எதிர்வாதம்:

தமிழக அரசின் வாதங்களுக்குப் பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்றுவது மிகவும் சாதாரணமான வழிபாட்டு நடைமுறைதான் என்று தெரிவித்தனர்.

இதற்காகத் தனியாகச் சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும், பக்தர்களை நேரடியாகத் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

புகைப்படங்களை ஆய்வு செய்த நீதிபதிகள்:

இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த நாளுக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக, வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் கோயில் அமைந்துள்ள பகுதி, தீபத்தூண் இருக்கும் இடம், மலைப்பகுதியின் அமைப்பு உள்ளிட்டவற்றை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கப்போகும் உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

 

 

MUST READ