Homeசெய்திகள்மாவட்டம்சாணார்பட்டி அருகே செல்போன் டவர் வசதியின்றி தவிக்கும் கிராமம் – தென்னை, புளிய மரங்களில் ஏறி...

சாணார்பட்டி அருகே செல்போன் டவர் வசதியின்றி தவிக்கும் கிராமம் – தென்னை, புளிய மரங்களில் ஏறி பேசும் அவலம்!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்கிலியான் கொடை கிராமத்தில் செல்போன் டவர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தகவல் தொடர்பின்றி தவித்து வருகின்றனர். செல்போனில் பேசுவதற்காக தென்னை மற்றும் புளிய மரங்களின் உச்சியில் ஏறி நின்று பேசும் நிலை அங்கு நிலவி வருகிறது.சாணார்பட்டி அருகே செல்போன் டவர் வசதியின்றி தவிக்கும் கிராமம் – தென்னை, புளிய மரங்களில் ஏறி பேசும் அவலம்!

இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனர்.

இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் பட்டன் செல்போன்கள் முதல் நவீன ஆன்ட்ராய்டு செல்போன்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், கிராமத்திற்குள் வந்தவுடன் செல்போன் சிக்னல் கிடைக்காததால் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் 4ஜி, 5ஜி என தகவல் தொடர்பு வசதிகள் விரிவடைந்து வரும் நிலையில், இந்தக் கிராம மக்கள் அடிப்படை செல்போன் சேவையைக்கூடப் பெற முடியாமல் உள்ளனர்.

கிராமத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் ஓரளவு சிக்னல் கிடைப்பதால், அந்த இடங்களைத் தேடிச் சென்று செல்போனில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக, சிலர் செல்போன் சிக்னல் கிடைப்பதற்காகத் தென்னை மரங்கள் மற்றும் புளிய மரங்களின் உச்சியில் ஆபத்தான முறையில் ஏறி நின்று பேசுகின்றனர்.

இணைய வசதியைப் பயன்படுத்த முடியாததுடன், மாணவர்களின் ஆன்லைன் கல்வி மற்றும் அன்றாட டிஜிட்டல் சேவைகளையும் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோக்களைத் தொடர்புகொள்வது, அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைப்பது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக்கூட செல்போன் தொடர்பு இல்லாததால் சிரமம் ஏற்படுவதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவில், தகவல் தொடர்பு வசதி இல்லாமல் தங்கள் கிராமம் பல ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, சக்கிலியான் கொடை கிராமத்தில் புதிய செல்போன் டவர் அமைத்து, தடையற்ற தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கும், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்களான சக்கிலியான் கொடையைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் தினகரன் ஆகியோர் தங்களது கிராமத்தின் தகவல் தொடர்பு சிரமங்கள் குறித்து பேட்டியளித்துள்ளனர்.

ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – இளைஞர் பலி; 4 பேர் படுகாயம்!

MUST READ