திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததாகத் தகவல்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மனு நேற்றிரவு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை விசாரணைக்காகப் பட்டியலிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
