முசிறி அருகே கார் வேப்பமரத்தில் மோதி கோர விபத்து – 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்!
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்பமரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், சக்திவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட 10 பேர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காகத் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து காரில் சென்றுள்ளனர்.
விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது துறையூர் – முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே சென்றபோது, கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேப்பமரத்தின் மீது பலமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சக்திவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முசிறி அருகே நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
