இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் ஜோடியாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான வேதமூர்த்தி – சுபா வரதராஜன் தம்பதியினர், தற்போது ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வெளியிட்டுள்ள வீடியோக்களால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் அதிகமான பார்வையாளர்கள், லைக்குகள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காகப் பலரும் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதன் மூலம் விளம்பர வருவாய், சினிமா வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளும் கிடைக்கின்றன. குறிப்பாக, கணவன் – மனைவி இணைந்து குடும்பப் பிரச்சினைகள், ஊடல்கள், சண்டைகள் போன்றவற்றை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில், ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் வேதமூர்த்தி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் வேதமூர்த்தி – சுபா வரதராஜன் தம்பதியினர். இவர்களுக்குத் தனித்தனியாகவும் ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வந்த இந்தத் தம்பதியினர், தற்போது நிஜ வாழ்க்கையில் பிரிந்து வாழ்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
கணவர் வேதமூர்த்தி கூறுவது என்ன?ஊ
தனது மனைவி சுபா வரதராஜனின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வேதமூர்த்தி முன்வைத்துள்ளார். சினிமா மீதான ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மனைவி சுபா வரதராஜன் மறுப்பு:
இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சுபா வரதராஜன், தனது குடும்ப வாழ்க்கையில் தான் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார்.
வேதமூர்த்தி தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னைப் பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கணவரின் குடும்பத்தினரும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்காகவே வாழ்ந்து வருவதாகவும், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து அவர் தனது வீடியோவில் வேதனையுடன் பேசியுள்ளார்.
அறிவுரை கூறியவர்கள் வாழ்க்கையில் பிரச்சினை:
கணவன் – மனைவிக்கு இடையிலான புரிதல், குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
ஆனால், தங்களது நிஜ வாழ்க்கையில் அதுபோன்ற புரிதல் இல்லை என்று சுபா கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அறிவுரை வழங்கும் அளவுக்கு வீடியோக்களை வெளியிட்டாலும், நடைமுறை வாழ்க்கையில் அதைப் பின்பற்ற முடியாதபோது, தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பே இருவரும் இணைந்து வீடியோக்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டதாகவும், தனக்குக் கிடைத்த சமூக வலைதளப் பிரபலத்தைப் பயன்படுத்தி விளம்பரங்கள் மற்றும் சினிமா வாய்ப்புகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் சுபா தெரிவித்துள்ளார். உண்மை நிலவரம் தெரியாமல் தன்னைப் பற்றித் தவறாகப் பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெட்டிசன்கள் மத்தியில் விவாதம்:
இருவரும் மாறி மாறி வெளியிட்ட குற்றச்சாட்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தின. இதற்கிடையே, அந்த வீடியோக்களை இருவரும் தங்களது பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளனர்.
இருப்பினும், இந்தத் தம்பதியினருக்கு இடையே உண்மையில் என்ன நடந்தது, இருவரில் யார் கூறுவது உண்மை என்ற கேள்விகளை முன்வைத்து நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஜோடியாக வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் புகழ்பெற்றவர்கள், அதே சமூக வலைதளங்கள் வழியாகத் தங்களது குடும்பப் பிரச்சினைகளைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
