திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90 சதவீத தீக்காயங்களுடன் அவர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் – நிர்மலா தம்பதியினர். தினேஷ் அதே பகுதியில் சொந்தமாகத் தறித்தொழில் செய்து வருகிறார். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் சன்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தினேஷ் மது அருந்திவிட்டு, மனைவி நிர்மலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த தினேஷ், நிர்மலாவிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது தினேஷின் தாயார் சாந்தாமணி மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோரும் நிர்மலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிர்மலா, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு தினேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து, அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிர்மலா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிர்மலா பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தனது இந்தத் தற்கொலை முயற்சிக்கு கணவர் தினேஷ், மாமியார் சாந்தாமணி மற்றும் கணவரின் தம்பி கார்த்தி ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தனது 6 வயது குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேடபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
