கீழ்பவானி பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
வழக்கமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழ்பவானி பிரதான கால்வாயின் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளுக்கும் உரிய கால அட்டவணையின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கீழ்பவானி பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பருவமழை போதிய அளவில் பெய்யாததால் ஏற்கெனவே விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், புன்செய் பாசனத்திற்கும் சிறப்பு நனைப்பிற்கும் தண்ணீர் வழங்கினால், விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர்களைச் சாகுபடி செய்து விவசாயப் பணிகளை மேற்கொள்ளப் பெரிதும் உதவியாக இருக்கும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி கூறுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கோரியுள்ள கால அட்டவணையின்படி புன்செய் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
