இயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து புதிய படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்த இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று பல தேசிய விருதுகளையும் அள்ளியது.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கியுள்ளதாகவும், அதனைத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவருக்குச் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மணிரத்னம், நடிகர் சூர்யாவை அணுகிய போது இந்தக் கதையை தான் அவரிடம் சொன்னதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்போது கிடைத்த தகவலின் படி, அதே புராஜெக்ட்டுக்காக மற்றொரு பெரிய நடிகருடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்கான தயாரிப்பு நிறுவனமும் ஏறத்தாழ இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் மட்டுமே இருப்பதால், இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
