Homeசெய்திகள்சட்டம்சபரிமலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு தரிசன அனுமதி கோரிய வழக்கு – விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்...

சபரிமலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு தரிசன அனுமதி கோரிய வழக்கு – விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

-

- Advertisement -

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.சபரிமலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு தரிசன அனுமதி கோரிய வழக்கு – விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நல வாரிய உறுப்பினர் அனுஸ்ரீ, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யத் தனக்கு அனுமதி வழங்குமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சபரிமலைக்குச் சென்று வருவதாகவும், கடந்த ஜனவரி மாதம் 15 மூன்றாம் பாலினத்தவர்களுடன் சுவாமி தரிசனம் செய்யச் சென்றபோது, பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பாலினப் பாகுபாடு காட்டாமல் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரள மாநிலத்தில் உள்ள கோவில் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருப்பது எப்படி விசாரணைக்கு உகந்ததாக இருக்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இதே கோரிக்கையுடன் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர். எதிர்மனுதாரர்கள் அனைவரும் கேரள மாநிலத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.

இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுவதாகக் கூறி, மனுவைத் திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் தினக்கூலி ரூ.70 குறைப்பு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

MUST READ