திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், நினைவிட வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்
பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து வந்திருந்த அவர், தலைவரிடம் வாழ்த்து பெற்றதைத் தொடர்ந்து அங்கிருந்து அடுத்தகட்ட நிகழ்ச்சிகளுக்குப் புறப்பட்டார்.
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை
இதையடுத்து, மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற அவர், அங்கும் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், கலைஞரின் திருவுருவச் சிலைக்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது நினைவிட வளாகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் பிறந்தநாள் பரிசுகளையும் வழங்கினார்.
பெரியார் நினைவிடத்திலும் மரியாதை
மெரினா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் செல்லும் உதயநிதி ஸ்டாலின், அங்கு தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். மேலும், அங்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது இல்லமான ‘குறிஞ்சி’ இல்லத்திற்குச் செல்லும் அவர், அங்கு திரண்டிருக்கும் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெறுகிறார்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலினின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
