Homeசெய்திகள்மாவட்டம்சாத்தூர் நகராட்சிப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – அரசு...

சாத்தூர் நகராட்சிப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – அரசு மருத்துவமனையில் அனுமதி!

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாத்தூர் நகராட்சிப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – அரசு மருத்துவமனையில் அனுமதி!

சாத்தூர் வெள்ளைக்கரை சாலையில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் 26 மாணவ, மாணவிகள் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவைச் சாப்பிட்டுள்ளனர். அவர்களில் சன்னாசி (12), வருண் (8), ஹன்சிகா (9), அபிநய் (10), சிவப்பிரியா (10), ஹரிகரன் (11), தன்யா (10) ஆகிய 7 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர் மற்றும் சாத்தூர் நகர் போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்துணவு சமையலர் காளீஸ்வரி (52), சமையல் உதவியாளர் ஷகீலாபாது (46), சத்துணவு அமைப்பாளர் பிருத்திகா (41) ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி அருகே 1,500 ஏக்கருக்கும் மேல் கருகும் சம்பா பயிர்கள் – கால்நடைகளை மேயவிட்டு விவசாயிகள் வேதனை!

MUST READ