
தொகுதி மறுவரையறை மசோதாவின் காரணமாக, தமிழ்நாட்டின் மக்களவை எம்பிக்கள் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும் என்றும், மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்திலிருந்து 7.23 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போதைய 543-லிருந்து 816 ஆக உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ள அவர், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அறிவித்த சில நிமிடங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடியும் சட்ட அமைச்சரும் இது குறித்த விளக்கங்களை அளித்துள்ளனர். மகளிருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனப் பிரதமர் மோடி இதன் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் 39-லிருந்து 59 ஆகவும், புதுச்சேரியில் 1-லிருந்து 2 ஆகவும் எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். அதேபோல், கேரளாவில் 20-லிருந்து 30 ஆகவும், கர்நாடகத்தில் 28-லிருந்து 42 ஆகவும், தெலுங்கானாவில் 17-லிருந்து 26 ஆகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 25-லிருந்து 38 ஆகவும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
