காரியாபட்டியில் தவணை வசூலிக்கச் சென்றவர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு – தப்பிச் செல்ல முயன்றவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காமராஜர் காலணியில் தவணைப் பணம் வசூலிக்கச் சென்றவர், வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் (52) என்பவர், காரியாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தவணை முறையில் பணம் வழங்கி, அதற்கான தினசரி தவணைத் தொகையை வசூலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காரியாபட்டி காமராஜர் காலணியில் வசிக்கும் அழகர் என்பவரது வீட்டிற்குத் தவணைப் பணம் வசூலிப்பதற்காக மணிவண்ணன் சென்றுள்ளார். அப்போது, அழகரின் மனைவி ஜெயலட்சுமியிடம் தனது ஆடையைச் சரிசெய்ய வேண்டும் எனக் கூறி வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மணிவண்ணன், அங்கிருந்த பீரோவின் சாவியை எடுத்துத் திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வீட்டிற்குள் சென்ற ஜெயலட்சுமி, பீரோவில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மணிவண்ணனை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரிடம் இருந்த தங்க நகைகளையும் மீட்டனர்.
இதுகுறித்து காரியாபட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிவண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரிடமிருந்து 12 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
தவணைப் பணம் வசூலிக்கச் சென்றவர் வீட்டிற்குள் புகுந்து நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் காரியாபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி திருட்டு – உண்டியலையும் உடைத்த மர்ம நபர்!
