சென்னை கொரட்டூரில் 1.2 கோடி ரூபாய் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் 9வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், கொரட்டூரில் உள்ள தனது பூர்வீக நிலம் 78 செண்ட் விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் இடைத்தரகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை அணுகினேன்.
சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பதில் சில நடைமுறை சிக்கல் இருந்ததால், அதை தீர்த்து வைத்து இடத்தை விற்பனை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக கமிஷன் அடிப்படையில் பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மின்ட் ரமேஷை அணுகினோம். ஆனால் அவரால் நிலத்தை சொன்னப்படி விற்பனை செய்ய முடியவில்லை.


இதனிடையே வேறு ஒருவர் மூலம் நிலத்தை விற்பனை செய்து விட்டதாகவும், அதற்கு தனது கூட்டாளி நாகர் கோயில் மகேஷ் என்பவருடன் வீட்டிற்கு வந்து மிரட்டி 1.2 கோடி ரூபாய் பறித்து சென்றதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் காவல் நிலையத்தில் வேறு ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், மின்ட் ரமேஷ், அவருடைய கூட்டாளி நாகர் கோயில் மகேஷ் இருவரும் கொலை மிரட்டல் செய்ததாக தெரிவித்திருந்தார்.இந்த இரண்டு புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மின்ட் ரமேஷின் மகனின் திருமணத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடியும் வரை காத்திருந்த போலீசார் , அவருடைய கூட்டாளி மகேஷ் இருவரையும் கைது செய்தனர்.


