யார் இந்த சைலேந்திரபாபு? முழு பின்னணி!
தமிழகத்தின் டிஜிபி சைலேந்திர பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது வாழ்க்கை பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திரபாபு. மதுரை வேளாண் ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின் இந்தியக் காவல் பணி அதிகாரியாகப் பணியைத் துவங்கினார். அதன்பின்
தருமபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

இதனையடுத்து கடலூர், காஞ்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார். மேலும் சென்னையில் துணை ஆணையராகவும், இணை ஆணையராகவும் பணிபுரிந்தார். இவர் 1987 முதல் 2012ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முனைவர் பட்டம் பெற்ற சைலேந்திர பாபு, 2010-11ல் கோவை மாநகர காவல் ஆணையர், 2 சிறுவர்களை கொடூரமாக கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து பிரபலமானார். அதன்பின் லஞ்ச ஒழிப்புத்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை என பல பிரிவுகளில் ஏடிஜிபியாக தடம் பதித்த இவர், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது தண்ணீரில் மூழ்கிய மக்களை நேரடியாக களத்தில் இறங்கி காப்பாற்றி மனித நேயத்தை வெளிப்படுத்தினார்.
உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு, சொற்பொழிவாற்றுதல் உள்ளிட்டவற்றில் இவருக்கு அலாதி பிரியம். உடற்பயிற்சியைத் தீவிரமாகக் கடைபிடித்து உடலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் ‘உடல்நலத் தகுதி’ எனும் தமிழ் நூலை சைலேந்திர பாபு எழுதியுள்ளார். மேலும் நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம், சாதிக்க ஆசைப்படு உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். நீச்சல், தடகளம், துப்பாகிச்சுடுதல், சைக்கிளிங் வித்தகரான இவர் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் “RD சிங்” கோப்பையை பெற்றுள்ளார். 2004 இல் பாங்காக்கில் நடைபெற்ற Asian Masters Athletic Championships, சென்னை மராத்தான், மற்றும் கோவை மராத்தான் போட்டியிலும் வெற்றி வாகை சூடியவர் சைலேந்திரபாபு. இவரின் சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பதக்கங்களை வழங்கி மத்திய, மாநில அரசுகள் சிறப்பித்தது குறிப்பிடதக்கது.
சாமானிய குடும்பத்தில் பிறந்து, காவல்துறை துணை கண்காணைப்பாளர், காவல்துறை கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை தலைவர்- டிஐஜி, காவல்துறை தலைவர்- ஐஜி, காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர்-ஏடிஜிபி என படிப்படியாக முன்னேறிய இந்த சாதனையாளருக்கு ஏபிசி நியூஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாமே!