ஓபிஎஸ் நடத்துவதை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஓபிஎஸ் நடத்துவது அதிமுக கூட்டமில்லை. தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும். ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது. பண்ருட்டி ராமச்சந்திரன் மூத்த கட்சி நிர்வாகி. அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அதனை அவர் கெடுத்துக்கொள்கிறார். ராமச்சந்திரன் ஓபிஎஸ் உடனான நட்பை துண்டித்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.