ரஃபேல் போர் விமானங்களை தயாரித்த நிறுவனம்தான், அதே போர் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு ரஃபேல் கைக் கடிகாரங்களை தயாரித்துள்ளது. அதில் ஒரு வாட்ச்சைத்தான் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கட்டி தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நேரடியாக அவர் விளக்கம் அளிக்காததால் பரபரப்பும், வாட்ச் குறித்த மர்மமும் எழுந்துள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வித்தியாசமான வாட்ச் குறித்த பல்வேறு விதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த கடிகாரத்தின் விலை குறித்தும், நேர்மையான ஒரு எஸ்பியாக பணியாற்றிய அண்ணாமலை எப்படி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் கட்டினார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அதற்கான பில்லை வெளியிடும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் பற்றி பேசுகிறார்களோ அன்று வாட்சிக்கான பில்லை வெளியிடுவேன். ரபேல் வாட்ச் ஸ்கெட் எனக்கு இல்லை . அந்த வாட்ச்சை வைத்துதான் திமுகவுக்கு நான் ஸ்கெட்ச் போட்டு இருக்கிறேன். திமுகவினரின் ஊழல் குறித்து எதுவும் கேட்காமல் விட்டதன் விளைவு, இன்றைக்கு இந்தியாவில் ஊழலில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. தமிழகத்தில் 30 சதவீத கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை உள்ளது.. திமுகவினருக்கு சொந்தமான சாராய ஆலைகளில் இருந்து 60 சதவீத மது பாட்டில்களை டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. நிலைமை இப்படி உள்ளபோது, எவ்வாறு திமுக மதுக் கடைகளை மூடும் என்று தெரியவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.