சென்னை மெரினாவில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறதாம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலாவின் கருத்து தேவையில்லாத கருத்து. ஐநா சபை தலைவர் போல சசிகலா பேசிவருகிறார். தினகரன், சசிகலா அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். சசிகலா பொய் சொல்கிறார். ஜெயலலிதா இதய அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மாவின் ஆன்மா அவரை சும்மா விடாது. தூங்கவிடாமல் செய்யும்.

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உறுதியாக கூறிவிட்டார். எங்கள் தலைமையிலான கூட்டணியே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இடம்பெறும். நாங்கள் ஒதுக்கும் இடங்களே கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும். எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. கூட்டணியிலோ, கட்சியிலோ தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை சேர்த்துக்கொள்வதாக இல்லை. பொங்களுக்கு கரும்பை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது.” எனக் கூறினார்.