மருத்துவத்தை தமிழில் படிக்கலாம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருப்பது,வெறும் வாக்கு அரசியலுக்காக தான் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் மனுஷ்யபுத்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “இனமான பேராசிரியரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் நாம் அனைவரும் அவரது பாதையில் சென்றால், இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் இருக்கும். ஒன்றிய பாஜக அரசு அறிவித்தபடி வேலை வாய்ப்பு வழங்கவில்லை. மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கான வேலை மறுக்கப்படுகிறது. பல மொழிகளைப் பேசும் நாட்டில் ஒரே நாடு, ஒரே மொழி என சொல்லி, ரஷ்யாவை போல் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடக்கிறது. மருத்துவத்தை தமிழில் படிக்கலாம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியது, வெறும் வாக்கு அரசியலுக்காகத் தான்” என குற்றஞ்சாட்டினார்.
