புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக இன்று பந்த்-க்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள வீட்டில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.


புதுச்சேரி மாநிலத்தில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனிடையே ஆளும் அரசில் கூட்டணியில் இருந்து கொண்டே, ஒன்றிய பாஜக அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு பெறாமல், தங்களுடைய சுய நலனுக்காக இன்று வணிகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு வணிகர்கள் சங்கங்கள், பேருந்து உரிமையாளர்கள், காங்கிரஸ், திமுக மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பந்தை ஆதரிக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிமுக அழைப்பு விடுத்திருந்த பந்த் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தராததால் நேரு வீதி, பெரிய மார்க்கெட் உள்ளிட்ட நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிமுக அழைப்பு விடுத்திருந்த பந்த் போராட்டத்திற்கு யாரும் ஆதரவு தராததால், இன்று பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
