திருச்சியில் ரூ. 655 கோடியில் 5,639 புதிய திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ. 308 கோடி மதிப்பீட்டில் 5,951 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


அதன்பின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன, 50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உலக நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்தை நோக்கி வருகின்றன, உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள்.. செயல்களால் பதிலளிப்பார்.. நம்பிக்கை அதிகமாவே இருக்கிறது. உதயநிதி எம்.எல்.ஏ ஆன போதும் விமர்சனங்கள் எழுந்தன. இப்போது அமைச்சரான போதும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உதயநிதிக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஏழை, எளிய, விளிம்பு மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள். சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல்முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசுதான். இந்தியாவில் முதல்முறையாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தவர் கலைஞர். பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. திமுக அறிமுகப்படுத்திய மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தின் 1 கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன். வீட்டிற்கே சென்று மக்களுக்கு சிகிச்சை அளிப்பதுதான் மக்களை தேடி மருத்துவத் திட்டம். இந்த ஓராண்டில் ஒருகோடி நபர்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளித்து இருப்பது மிகப்பெரிய சாதனை. திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்” எனக் கூறினார்.
