நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.


நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக் குமார் இவர் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகள் நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் வீடு முழுவதும் தரைமட்டமாகி உள்ளது. அந்த வீட்டிற்கு அருகே வசித்து வந்த மூதாட்டி பெரியக்காள் (73) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தனர். அவரை அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தில்லை பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் தில்லைகுமார் குடும்பத்துடன் தலைமறைவு ஆகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும், மோகனூர் வட்டாச்சியர் திருமதி. ஜானகி, மோகனூர் போலீசார் விபத்துக்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்ய வீட்டில் சட்டவிரோதமாக ஒரு டன் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை வைத்திருந்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதை காவல்துறை எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பட்டாசு விபத்தில் சில வீடுகள் தரைமட்டமாகி விட்டன. 20 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அவற்றின் சேத மதிப்பை கணக்கிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
