மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு
ரூ.5400 இழப்பீடு போதுமானதல்ல, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50,88,84,224/-னை இடுபொருள் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400/ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல. ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் இயற்கை உரத்திற்காக ரூ.17,924, தொடக்கநிலை ஆள் கூலிக்காக ரூ.12,000 என முதல் இரு வாரங்களில் மட்டும் ரூ.39,116/ஏக்கர் ரூ.15,646 செலவாகும் என வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் இரு வாரங்களைக் கடந்தவை. அவற்றுக்கும் இந்த மதிப்பீட்டின்படி தான் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. அதுமட்டுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை. அதனால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாகவே கருத வேண்டும். அதை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
