“சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சியை, ஜனவரி 13-ஆம் தேதி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் இருப்பது போன்ற அதே உணர்வோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “சென்னை சங்கமம்”, ” நம்ம ஊரு திருவிழா” அரசு நிகழ்ச்சியாக நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும்” சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நம்ம ஊரு திருவிழாவாக இந்தாண்டு மிக சிறப்புடன் சென்னயில் நடைபெறவுள்ளதென கூறினார். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு முழுவதும் நாட்டுப்புற கலை வடிவங்களை அடையாளப்படுத்தும் விதமாக ஜனவரி முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் ஏறுதழுவல், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி, பொங்கல் திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் மிக முக்கியமாக ஜனவரி 13 முதல் 17-ஆம் தேதி வரை “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒருங்கிணைப்பில் நடைபெறும் என்றார்.

சென்னை தவிர மதுரை, திருச்சி, கோவை, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 7 நகரங்களில் “நம்ம ஊரு திருவிழா” கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலைநிகழ்ச்சியை ஜனவரி 13-ஆம் தேதி தீவுத்திடலில், முதலமைச்சர் தொடங்கி வைப்பர் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சென்னை முழுவதும் 16 இடங்களில் மாலை நேரத்தில் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாவும் இணைந்து நடைபெறும் என்றார். இதில் இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளர் என்றும் ஒட்டுமொத்தமாக 805 குழுக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை சங்கமம் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை என்றாலும் அவர் இருப்பது போன்ற அதே உணர்வோடு தமது அண்ணனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கனிமொழி கூறினார்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பின்னர், பல கலைஞர்களுக்கு உலகம் முழுவதும் சென்று நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைத்ததாகவும் தற்போதும் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி இடம்பெறுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, உணவு என்பது அவரவர் விருப்பம் என்றும் அதனை சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் கனிமொழி பதிலளித்தார்.


