காலமானார் `என் உயிர்த் தோழன்’ பாபு – மொத்த வாழ்க்கையையும் முடக்கிப் போட்ட ஒரேயொரு சண்டைக் காட்சி!
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாபுவை ஹீரோவாகப் போட்டு எடுத்த படம் என் உயிர்த் தோழன். பாடல்கள் ஹிட். இதில் அறிமுக ஹீரோவான பாபுவின் நடிப்பு கவனிக்கப்பட்டது. அடுத்தடுத்து சில படங்கள் அவருக்கு கமிட் ஆகின. பத்துப் படங்களுக்கு மேல் புக் ஆனதாகச் சொல்லப்பட்டது. ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். கிராமத்துக் கதைகள் இவருக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆவதாக கோலிவுட்டில் பேசப்பட்ட நிலையில் தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் கமிட்டாகி நடிக்கத் தொடங்கியிருந்தார்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய சில நாள்களில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. காட்சியில் மாடியிலிருந்து ஹீரோ குதிக்க வேண்டும். நிஜமாகவே குதிப்பதாக பாபு சொன்ன போது யூனிட்டில் அதை ஏற்க மறுத்திருக்கிறார்கள். ’டூப் வைத்துக் கொள்ளலாம்’ என இயக்குநர் சொன்னதையும் கேளாமல் ’தத்ரூபமாக இருக்கும்’ எனச் சொல்லி நிஜமாகவே பாபு குதித்திருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத நொடியில் நிலை தடுமாறிய பாபு தவறுதலாக வேறு இடத்தில் விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்துவிட்டன.
1991ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சினிமாக் கனவுகளுடன் வந்த பாபுவின் வாழ்க்கையையே அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இன்று வரை பாபுவின் வயதான அம்மா மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார். அவருக்குமே வயது 80-ஐ கடந்துவிட்டது.
இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன் பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை ரொம்பவே மோசமாகியதாகச் சொல்கிறார்கள். சிகிச்சைகள் எதுவும் கைகொடுக்காமல் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்துவிட்டது. ஆசையோடு சினிமாவுக்கு வந்த அந்த மனிதரை மொத்தமாக முடக்கிப் போட்டு, வாழ்க்கையையே முடித்தும் வைத்துவிட்டது ஒரேயொரு சண்டைக் காட்சி.
இதில் இன்னொரு ஹைலைட் என்னவெனில் தன் அறிமுகப் படமான ‘என் உயிர்த் தோழ’னில் அரசியில் கட்சித் தொண்டராக நடித்திருந்தார் பாபு. நிஜத்திலும் பாபுவுக்கு அரசியல் பின்புலம் இருந்தது. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி., சபாநாயகர் எனப் பல பதவிகளிலிருந்த க.ராஜாராம் இவரது தாய்மாமா.
`என் உயிர்த் தோழன்’ பாபுவுக்கு நினைவஞ்சலிகள்!