அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தற்போதைய திமுக அரசு மூடுவிழா செய்ய முயல்கிறது என சசிகலா குற்றஞ்சாட்டினார்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே சசிகலா செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பேருந்து நிலையம் அருகே பிரச்சார வேனில் இருந்த படி, தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தோம். ஆனால் தற்போதைய திமுக அரசு அவற்றை மூடுவிழா செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. தற்போதைய ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கும் போதை பொருட்கள் கலாச்சாரம் பெருகியுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை என்பது சட்டமன்றத்தில் இருந்து அனுப்பப்படும். உரையை ஆளுநர் அலுவலகம் திருத்தம் செய்து அனுப்பும். மீண்டும் சட்டமன்றத்தில் அதை சரிபார்த்து அச்சிடுவது வழக்கம். அதை தான் ஆளுநர் சட்டமன்றத்தில் வாசிப்பார். ஆனால் இன்றைய தினம் ஆளுநரின் உரையில் என்ன இருந்தது என்பது நம்மக்கு தெரியாது.
இபிஎஸ், ஓபிஸ் 2 பேரும் அவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் சம்மந்தப்பட்ட வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். தலைவர் கொண்டுவந்த சட்ட திட்ட விதிகள் படி இருக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள், அதன் படி தான் எல்லாமே நடக்கும். தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள கரும்புகள் 6 அடி உயரம் வரை இருக்கவேண்டும் என தெரிவித்து அளவு குறைவாக உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யாமல் உள்ளனர். இதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்” என தெரிவித்தார்.