ஈரோட்டில் மட்டும் சாலையில் பேட்ச் ஒர்க் ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேர்தல் என்றாலே டிடிவி தினகரனுக்கு அச்சம் ஏற்பட்டு விடுகிறது. விவசாயக்கடன், நகைக்கடன் உள்ளிட்டவை தள்ளுபடி செய்யவில்லை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தில்லுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் திமுக காங்கிரஸ் கட்சியை நிறுத்துகிறது. தில் இருந்தால் திமுக நிற்க வேண்டியது தானே? பன்னீர்செல்வத்துக்கு வேட்பாளரை முன்மொழியவும், வழி மொழியவும் கூட ஆட்கள் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் தான். 85 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக பொய் கூறுகிறார்.
மீனவர் வாழ்வாதாரத்தை அழித்து நினைவு சின்னம் தேவையா அறிவாலயத்தில் 10 ஆயிரம் அடி கூட சிலை வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் பணத்தில் அமைத்துக் கொள்ளுங்கள். இடைத்தேர்தல் நடக்கும் ஈரோட்டில் மட்டும் சாலைகளில் பேட்ச் ஒர்க் ஏன் நடக்கிறது? ஈரோட்டில் மட்டும் நிலவரி ரத்து என திமுக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கு ரூ.1,000 கோடி கூட செலவு செய்ய திமுக தயாராக இருக்கிறது. என்ன செய்தாலும் அதிமுகவே வெற்றி பெறும்.” எனக் கூறினார்.
