மதுரை எய்ம்ஸ்க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை, நிதி பிரச்சனைதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மதுரை எய்ம்ஸ் குறித்து மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, “இந்தியாவில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் போதிய உள் கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டுவருகின்றன. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு, மதுரை எய்ம்ஸ் போன்று கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, இந்தியாவில் எந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் உள் கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியுள்ளது. தேவையில்லாமல் தமிழ்நாடு எம்பிக்கள் அரசியல் ஆக்குகின்றனர். பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்” என பதில் அளித்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 2015-2016 நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் 2016 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டிய போதே 200 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுவிட்டது. நிலம் வழங்குவதில் தாமதம் என ஒன்றிய அரசு கூறுவது ஏற்புடையதல்ல.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் 222 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தினோம். மதுரையோடு அறிவிக்கப்பட்ட ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. 2024 இறுதியில்தான் பணிகள் தொடங்க முடியும் என கூறியுள்ளனர். 2028 ஆம் ஆண்டு முடிவடையும் என தெரிவித்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்துவது ஒன்றிய அரசுதான்” எனக் கூறினார்.
