கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(50) இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரபாகரன்(30) பிரபு(29), இருவரும் இந்திய இராணுவத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனின் மனைவி பிரியா தெருவில் உள்ள ஊராட்சி பொது தண்ணீர் தொட்டியின் முன்பு துணி துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பார்த்த கவுன்சிலர் சின்னசாமி இது பொது தண்ணீர் தொட்டி, இதில் துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகிலிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்த பிரச்சனையில், பிரபாகரன் கவுன்சிலர் சின்னசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆந்திரமடைந்த கவுன்சிலர் சின்னசாமி தனது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் சென்று பிரபாகரனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரின் தம்பி பிரபுவையும், இருவரையும் கற்கள் மற்றும் இரும்பு ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் முதலில் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி சிங்காரப்பேட்டை போலீசார் தற்போது அதை கொலை வழக்காக பதிவு செய்து
தகராறு சம்மந்தமாக குருமூர்த்தி, மாதையன், மணிகண்டன், வேடியப்பன், ராஜபாண்டி, குணாநிதி ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கவுன்சிலர் சின்னசாமி, புலிப்பாண்டி, காளியப்பன் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
