தமிழக மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று ஈரோட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு அரணாக பாதுகாப்பாக இருந்துள்ளது. 33 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இஸ்லாமிய மக்களுடைய பிரச்சனைக்காக முதலில் குரல் கொடுப்பது அதிமுக.

அதிமுகவுக்கு மதமோ, சாதியோ கிடையவே கிடையாது. 100 சதவீதம் மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுகவில் ஜாதி மத பேதமில்லை, கூட்டணி வைத்தால் அந்த கட்சியின் கொள்கையை ஏற்பதாக அர்த்தமா? ஒரு கட்சி சொல்றதை எல்லாம் கேட்போம்னு நினைக்காதீர்கள். கூட்டணி வேறு கொள்கை வேறு. ஸ்டாலின், உதயநிதி வரிசையில் இன்பநிதி வந்தாலும் ஆதரவு கொடுப்போம் என ஒரு அமைச்சர் சொல்கிறார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. வரக்கூடிய தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவுக்கு மக்களின் நியாபகம் வரும். ஆனால் பல லட்சம் முதியோரின் உதவித்தொகையினை திமுக நிறுத்தியது.மடிக்கணினி திட்டமும் நிறுத்தப்பட்டது. ஓட்டுப்போட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்டு வைத்துவிட்டார். ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டுவந்தது அதிமுக. 21 மாத திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்துக்கு எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை” என சாடினார்.
