DTCP ல் மனைபிரிவுக்கு ஆன்லைனில் ஒப்புதல் வழங்கும் முறை போல விரைவில் CMDA லும் ஆன்லைனில் ஒப்புதல் வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் credai அமைப்பின் சார்பில் நடைபெறும் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட ஏராளமான அதிகாரிகளும், credai அமைப்பின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்கு திட்டம் 2030 முதலமைச்சர் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் 1991ல் 1.90கோடியாக இருந்த நகர மக்கள் தொகை, 2011ல் 3.49கோடியாக அதிகரித்து 2031ல் 5.34 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதம் நகர்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். நகரமயமாதலில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என தெரிவித்தார். மேலும், DTCP மற்றும் CMDA உயரமான மற்றும் உயரம் குறைவான கட்டிடங்களுக்கு ஆன்லைன் மூலம் திட்ட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. DTCP ல் மனைபிரிவுக்கான ஆன்லைனில் ஒப்புதல் முறை போல விரைவில் CMDA லும் ஆன்லைனில் ஆன்லைன் ஒப்புதல் முறை நடைமுறை படுத்தப்படும்” என தெரிவித்தார்.
