spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வி.வி.ஐ.பி வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல்

வி.வி.ஐ.பி வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல்

-

- Advertisement -

ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் ஆடம்பர கொள்ளையர்கள். கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் ராபின் ஊட் திருடன்.  80ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000ரூபாய் கொள்ளையடித்த சுவாரஸ்ய கொள்ளையர்கள். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை நீலாங்கரையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக திரை பிரபலங்களான விஜய் மற்றும் முதல்வரின் மருமகன், மகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் வீடுகள் இங்கு அமைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நீலாங்கரை புளூ பீச் சாலை கேசுவரினா டிரைவ் பகுதியில் ஜாக்குவார் காரில் நள்ளிரவு வந்த கும்பல் ஒன்று அங்குள்ள டிவி.எஸ் குழும உரிமையாளரின் வீடு, தோல் தொழிற்சாலை உரிமையாளரின் வீடு மற்றும் தொழிலதிபர் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து சென்றனர்.

we-r-hiring

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தோல் தொழிற்சாலையின் உரிமையாளர் நையார் சுல்தான்(46) என்பவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சொகுசு காரில் வந்து தில்லாக கொள்ளையடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது போலி பதிவு எண் என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் புழல் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை மாற்றி சென்றதும் தெரியவந்தது. அதில் பதிவான எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, உரிமையாளர் உத்தரபிரதேசத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவர் என்பதும், இவர் லோன் கட்டமுடியாததால், சிறையில் பழக்கமான உத்தரபிரதேச கொள்ளை கும்பல் தலைவன் சஞ்சய் யாதவ் என்பவரிடம் காரை கொடுத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளை கும்பல் பயன்படுத்திய டோல்கேட்டில் பதிவான பாஸ்டேக் விவரங்களை வைத்து, காசியாபாத்தில் பதுங்கி இருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் ராஜேஷ் குமார் யாதவ்(35) என்பவரை துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர் மூலமாக புனித் குமாரையும் போலீசார் கைது செய்து விமானம் மூலமாக இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கும் சஞ்சய் யாதவ் தலைமையில் இர்பான், ராஜேஷ் குமார் யாதவ், புனித் குமார் ஆகியோர் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

முக்கிய கொள்ளையனான சஞ்சய் யாதவ் கையில் துப்பாக்கியுடன் வலம் வந்து மிரட்டி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதையும், யாரும் நெருங்காத படி 10 பவுன்சர்களுடன் வலம் வருவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கிலிருந்து சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் யாதவ் மீண்டும் தனது பாணியில் கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது.

சிறையில் இருந்த போது மற்றொரு ஆடம்பர கொள்ளையன் இர்பான் என்பவனுடன் சஞ்சய் யாதவ்விற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இர்பான் பீகார், பஞ்சாப் போன்ற இடங்களில் வி.வி.ஐ.பிக்களின் வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கக்கூடியவர்.

பின்னர் கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்கள், தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குபவரான இவரை ராபின் வூட் கொள்ளையன் என ஊர் மக்கள் அழைப்பதுண்டு. மேலும் கொள்ளையடிக்கும் பணத்தில் ஆடம்பர கார்களை வாங்கியும் வந்துள்ளார். இர்பான் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவரது மனைவி கவுன்சிலராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடமாநிலங்களில் மட்டுமே கைவரிசை காட்டி வந்த இந்த கும்பல், இந்த முறை கூகுள் மேப் மூலமாக சென்னையில் வி.வி.ஐ.பி ஏரியாக்களை தெரிந்துக்கொண்டு ஜாக்குவார் கார் மூலமாக நீலாங்கரை பகுதிக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டதும், குறிப்பாக 80ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000 ரூபாய் மற்றும் செருப்பு ஜோடி மட்டும் கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த பகுதியில் ஒன்றுமே கிடைக்காததால் அபிராமபுரம் போட் கிளப் சென்று நோட்டமிட்ட போதும் சிக்காததால் சொந்த ஊருக்கு தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முக்கிய நபர்களான சஞ்சய் யாதவ் மற்றும் இர்பான் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ