ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் பிரச்சாரம் முடிவடையும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 100% அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், 100% வாக்கு பதிவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பரிசு பொருட்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 4 பறக்கும் படைகள் உள்ளன. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடனுக்குடன் விசாரித்து வருகின்றனர்.
பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 இடங்களில் 2 வழக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகமாக அனுமதி பெறாமல் இயங்கி வந்த பணிமனைகள் 8 அகற்றப்பட்டன. 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு வெளியில் இருந்து வந்து தங்கி உள்ள நபர்கள் 25 ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரச்சாரம் முடிந்ததும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வரப்பெற்றதில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
