நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
கொந்தளிக்கும் மாணவர்கள் அமைப்பு
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக நாட்டின் தலைநகரான டெல்லியில் பல்வேறு அமைப்புகளும் மாணவர்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நியாயம் கேட்டுப் போராடும் இளைஞர்களுக்குத் தங்களது ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் திடீர் ரயில் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் சிறைபிடிப்பு
திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்குள் திரண்டு வந்த ஏராளமான மாணவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், தண்டவாளத்தில் இறங்கி முற்றுகையிட்டனர். அப்போது, பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த பயணிகள் ரயிலை மறித்து, மத்திய அரசுக்கும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் வீரியமிக்க முழக்கங்களை எழுப்பினர். “டெல்லியில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் இளைஞர்களின் குரலை நசுக்கக் கூடாது! நீட் முறைகேடுகளுக்கு உரிய நீதி வழங்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்!” என போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறையினர் குவிப்பு: பரப்பரப்பு சூழல்
ரயில் மறியல் குறித்துத் தகவல் அறிந்ததும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (RPF) உள்ளூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனும், சங்கப் பிரதிநிதிகளுடனும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், அவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதன்பின்னரே ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
