“நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், காவல்துறையினரின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும், கொடூரமான தாக்குதல்களுமே காரணம்” என்று பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தனது அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


நாகர்கோவில் லாக்-அப்பில் நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபர் ஒருவர், லாக்-அப்பில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவாக அலசிய வழக்கறிஞர் ஹென்றி டிபேன், “காவல்துறை தரப்பில் வழக்கம்போல மாரடைப்பு அல்லது தற்கொலை என்ற காரணங்களைக் கூறி வழக்கை மூட முயற்சிக்கின்றனர். ஆனால், சிறைக்குள் விசாரணையின் போது நடத்தப்பட்ட அத்துமீறிய தாக்குதல்களே இந்த மரணத்திற்கு அடிநாதமாக அமைந்துள்ளது. இது அப்பட்டமான லாக்-அப் மரணம்” என்று குற்றம் சாட்டினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தரப்பு நியாயங்களையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ள சந்தேகங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் மௌனம் கலைக்கப்படுமா?
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த காவல் மரணங்களைக் கடுமையாக விமர்சித்து, “ஊழலற்ற, தூய்மையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை” வழங்குவதாகக் கூறிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, இந்த நாகர்கோவில் சம்பவம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ”ஆட்சிப் பொறுப்பேற்றுச் சில மாதங்களிலேயே காவல்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முதலமைச்சர் தவறிவிட்டார். காவல்துறைக்குத் தன்னாட்சி அதிகாரம் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய அத்துமீறல்களை முதலமைச்சர் விஜய் இன்னும் எத்தனை நாட்களுக்குப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்?” என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை ஹென்றி டிபேன் முன்வைத்தார்.
சிபிசிஐடி விசாரணைக்கு வலுக்கும் கோரிக்கை!
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வெறும் நிவாரணத் தொகையை அறிவிப்பதோடு இந்த விவகாரத்தை நிறுத்திவிடக் கூடாது என்றும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். உள்ளூர் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், வழக்கை உடனடியாக மாநிலத்தின் உயரிய புலனாய்வுப் பிரிவான சிபிசிஐடி (CB-CID) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதிய தவெக அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் கறையை முதலமைச்சர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அரசின் எதிர்கால பிம்பம் அமையும் என பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் குறிப்பிட்டுள்ளாா்.
