குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அஜித்தின் 63 வது படமாக உருவாகியிருந்த திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டது. இப்படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், கார்த்திகேயா தேவ், பிரசன்னா, சுனில், பிரபு, யோகி பாபு, சிம்ரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக், காட்சிக்கு காட்சி தரமான சம்பவம் செய்து முரட்டு ஃபேன் பாய் என்பதை நிரூபித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை ஸ்டைலிஷ் ஆகவும், மாஸாகவும் காட்டி இருந்தார். அதேசமயம் அஜித் ரெபரன்ஸ், பழைய பாடல்கள் என ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருந்தார். இவ்வாறு இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகின்றனர்.
ஆனால் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் வெளியான முதல் 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை கடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படக்குழு குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது வரையிலும் உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூலை கடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.