பராசக்தி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25 வது படமான இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களின் மூலம் பெயரையும், புகழையும் பெற்ற சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதே சமயம் சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தொடர்பான அப்டேட்டை கொடுத்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டினார்.
இந்நிலையில் படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி நாளை (நவம்பர் 4) மாலை 5 மணி அளவில் பராசக்தி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.


