விஜய் தன்னுடைய பேச்சில் திமுக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு, போகிற போக்கில் பாஜகவை தொட்டுச்செல்வது என்று ஒரே டெம்ப்லேட்டில் பேசி வருவதாக மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் தெரிவித்துள்ளார்.

தவெகவின் 3ஆம் ஆண்டு விழாவில் விஜயின் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெகவின் 3ஆம் ஆண்டு விழாவில் விஜயின் பேச்சில் அரசியல் இருந்தது. ஆனால் விஜய்க்கு வாக்களிக்க முடிவு செய்தவர்களிடமே திரும்ப திரும்ப பேசுகிறார். ஓட்டு போடலமா? வேண்டாமா? என்று யோசிப்பவர்கள் யாரிடமும் விஜய் பேச மறுக்கிறார். தன்னை திமுகவுக்கு எதிரானவர் என்று சொல்லிவிட்டார். ஆனால் தன்னுடைய 17 நிமிட பேச்சில் நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று விஜய் சொல்லவே கிடையாது.
விஜய்க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என் யோசிப்பவர்கள், அவர் என்ன என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை பேச மறுக்கிறார். மாறாக திமுக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு. பாஜகவை போகிற போக்கில் தொட்டுவிட்டு செல்வது போன்று பேசுகிறார். இதையே தான் அவர் பேசுகிறார். விஜய் வெளியே வரவில்லை என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறார். அவர் தேர்தலில் வாக்களிப்பார் என்று சொல்கிறார். அப்படி முடிவு செய்யாதவர்களுக்கும் அவர் பேச வேண்டுமல்லவா?

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சிப்பது மட்டுமின்றி, அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு கேட்கிறார். அப்போது விஜய் தரப்பில் தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன்? என்று சொல்லிதான் வாக்கு கேட்க வேண்டும். அதைவிடுத்து எம்ஜிஆருக்கு என்ன செய்தார்களோ அதையே எனக்கும் செய்கிறார்கள் என்கிறார்.
நீங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் குறிவைக்கிறீர்கள் என்பது உண்மை தான். ஆனால் அதில் இருந்து வெளியே வந்து நீங்கள் பேச வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்வீர்கள் என்று சொல்ல வேண்டும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் , பொருளாதாரத்தை வளர்க்கவும் என்ன திட்டங்கள் உள்ளது என்று பேச வேண்டும். பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து விஜய் பேசாமல், தன்னை தாக்குகிறார்கள் என்று சொல்கிறார்.

திமுகவை எதிர்க்கிறார்கள் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். அவர்கள் செய்த ஊழல்களை சுட்டிக்காட்டுங்கள். ஆனால் அவற்றை எல்லாம் விஜய் பேச மறுக்கிறார். திமுகவை பிரச்சினைகள் அடிப்படையில் எதிர்க்க வேண்டும். விஜய் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது மட்டுமல்ல. பொதுக்கூட்டங்களிலேயே குறைவாக தான் பங்கேற்கிறார். மக்களையே குறைவாக தான் சந்திக்கிறார். தவெகவை பொறுத்தவரை அவர்களுக்கு ஊடகத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. விஜய் மட்டுமல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும்.
எல்லாவிஷயங்களையும் நாங்கள் சமூக வலைதளங்களிலேயே பதிவிடுவோம் என்றால் கொஞ்சநாள் கழித்து உங்களை கேள்வி கேட்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். விஜய் தன்னுடைய பேச்சில் அதிமுகவை குறிப்பிடாமல் பாஜக மற்றும் சிலர் என்று குறிப்பிடுகிறார். தங்களுக்கும் திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று சொல்கிறார். முதலமைச்சர் தங்களுக்கும் என்டிஏவுக்கும் போட்டி என்று சொல்வதால், இப்படி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவை புறந்தள்ளிவிட்டு அவர்களால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது.

மற்றொரு இடத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் வேண்டாம் என்றும் விஜய் சொல்கிறார். இதன் மூலம் அதிமுகவும் எதிரி என்பதை விஜய் ஒப்புக்கொள்கிறார். காங்கிரஸ் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக உள்ளனர். அவர்கள் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. தவெகவை பொருத்தவரை எப்படியாவது காங்கிரஸ் வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். விஜயின் 17 நிமிட பேச்சுவார்த்தையில் பட்ஜெட் குறித்தோ, சட்டம் ஒழுங்கு குறித்தோ எதுவும் இல்லை. ரசிகர்களை அடிப்படையாக கொண்டே விஜயின் பேச்சு அமைந்துள்ளது.
திமுக தரப்பில் விஜயின் பேச்சுக்களை புறக்கணிப்பதாக சொல்கிறார்கள். அதிமுகவும் அவருடைய பேச்சுக்களை ரசிக்கவில்லை. அவர்களும் விஜய்-ஐ தாக்குவதற்கான வேலைகளை தொடங்கி உள்ளனர். கரூர் துயரசம்பவம் குறித்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. சிபிஐ தரப்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. விஜயின் பிரச்சாரம் தொடர வேண்டும். இளைவெளி விடக்கூடாது. தேர்தல் நேரத்திலாவது பொதுக்கூட்டங்களை அதிகமாக நடத்த வேண்டும்.

என்டிடிவியில் இன்டர்வியூக்கும், இன்டராக்ஷனுக்கும் வித்தியாசம் தெரியாமல் டிஆர்பியை ஏற்றுவதற்காக அவர்கள் பாட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய் மீது தவறு கிடையாது. விஜயுடன் கலந்துரையாடல் நடத்துவதாக ஒப்புக்கொண்டுதான் போய் உள்ளனர். அவர்களுடைய நடவடிக்கை விஜய்க்கு பேக் பையர் ஆகிவிட்டது. சேனலுக்கு டிஆர்பி வர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அது நடந்துவிட்டது.
விஜய் சென்னையில் உள்ள டாப் எடிட்டர்களிடம் கலந்துரையாடி கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் யாரும் வெளியில் வந்து சொல்லியது கிடையாது. அதை என்டிடிவிகாரர்கள் பெரிதுபடுத்திவிட்டனர். பத்திரிகையாளர்கள் ஒருநாளைக்கு 10 அரசியல்வாதிகளிடம் பேசுவார்கள். அரசியல்வாதிகளும் 10 பத்திரிசையாளர்களிடம் பேசுவார்கள். இதெல்லாம் இயல்பான விஷயம். அதை என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் பெரிதுபடுத்திவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


