அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, செங்கோட்டையனை அந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கு அமித்ஷா முடிவு செய்துவிட்டார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமடைந்து இருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

தமிழக நாளிதழுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள நேர்காணலின் பின்னணி குறித்தும், அதிமுகவில் அடுத்ததாக அரங்கேற உள்ள விஷயங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமியை விலக்குவதற்கான வேலையை பாஜக தொடங்கி இருக்கிறது. செங்கோட்டையனை உள்ளே கொண்டு வருகிறார்கள். என்.டி.ஏ கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான காய் நகர்த்தல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கட்சியை எடப்பாடியிடம் இருந்தும் கைப்பற்றுகிற முடிவுக்கு அமித்ஷா வந்துவிட்டார். ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் அமித்ஷா இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று, 4 மாதங்களுக்கு முன்னறே செங்கோட்டையன் உள்ளே வரும் தகவலை சொல்லி இருந்தேன். இரட்டை இலை சின்னத்தை முடக்கப் போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அவர்களின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் அமைதியாக இருந்தால், அவர் தப்பிப்பார். இல்லாவிட்டால் அவர் சிறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன. இதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னோம்.
செங்கோட்டையனை வைத்து எடப்பாடியை மிரட்டி, அவரை பாஜக கூட்டணிக்கு வரவழைத்தார்கள். பாஜக தலைமையில் கூட்டணி அரசு அமையும். அரசில் பாஜக பங்கு வகிக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். இதற்கு எடப்பாடி பதில் சொல்லாமல் இருந்து வந்தார். தற்போது ஒரு வாரமாக எடப்பாடி எங்கே இருக்கிறார் என்றே தெரிய வில்லை. அமித்ஷாவின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தற்போது மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்த அமித்ஷா, தமிழ் பத்திரிகைகளுக்கு பேட்டியே அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் கூட்டணி ஆட்சி. ஆனால், அதிமுகவை சேர்ந்தவர் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். இது வடமாநிலங்களில் அவர்கள் செய்யும் அரசியல் பாணியாகும். மகாராஷ்ட்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, தேர்தல் ஆணையம் மூலம் கட்சியின் சின்னத்தை முடக்கி, இரண்டாம் கட்ட தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சர் ஆக்கி, அந்த கட்சியை ஒழித்தார்கள். அதே பாணியில் அதிமுகவை ஒழிக்கப்போகிறார்கள் என்று 3 மாதங்களுக்கு முன்பாக சொல்லி இருந்தோம்.
தற்போது கொஞ்சம் அதிமுகவை கொஞ்சமாக தாக்கி பேசி, எடப்பாடியின் பெயரை டம்மி ஆக்கிவிட்டார்கள். மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் கூட்டணி கட்சியின் தலைவரான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என்று அமித்ஷாவுக்கு கோபம் உள்ளது. அதனால் அவரை அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. தற்போது அது தீவிரமடைந்து வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் சொல்லவில்லை. அடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக செங்கோட்டையனை கொண்டுவரப் போகிறார்கள். அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி மாற்றம் தற்போது நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி நடக்காவிட்டால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் உதவி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு அதிமுக 90 – 100 இடங்களில் வெற்றி பெறுகிறது. பாஜக 20 இடங்களில் வென்றால் கூட, சுயேட்சைகள், பிற கட்சி வேட்பாளர்களை சேர்த்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பார்கள். ஆனால் எடப்பாடி முதலமைச்சராக ஆதரவு தர மாட்டோம் என்று சொல்லி அவரை மாற்றிவிட்டு, செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கி விடுவார்கள்.
தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மைக்கு போதிய இடங்கள் கிடைக்காவிட்டால் திமுகவையே உடைத்து, அந்த கட்சி எம்எல்ஏக்களை மிரட்டி, உள்ளே இழுப்பதற்கான வேலைகளையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் நோட்டாவிற்கு கீழே இருந்தவர்கள் தற்போது 5 சதவீத வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்து விடுவோம் என்று சொல்கிறார்கள் என்றால்? அப்போது என்ன என்ன முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. இதற்கு காரணமான எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க வேண்டும் என்று அமித்ஷா உறுதியாக இருக்கிறார். தற்போதே எடப்பாடி அதிகாரம் இன்றி தான் இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலின்போது, எடப்பாடியின் பெயரை பெரிதாக பயன்படுத்துவது கிடையாது. அவர் முண்டு பிடித்தால் இரட்டை இலை சின்னத்தை பிடுங்கி விடுவார்கள். அதன் பிறகு அதிமுக பொதுக்குழுவை கூட்டி, வேறு ஒருவரை பொதுச் செயலாளராக கொண்டுவருவது. இல்லாவிட்டால் இரண்டு துணை பொதுச் செயலாளர்களாக ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோரை கொண்டு வருவார்கள்.
தேர்தல் ஆணைய வழக்கு வந்தால் ஒபிஎஸ் கை ஓங்கிவிடும். ஓபிஎஸ்-ஐ பொதுச் செயலாளராக போட்டு, செங்கோட்டையனையும், எடப்பாடியையும் துணை பொதுச் செயலாளர்களாக போட்டு தேர்தல் முடிந்த உடன் உங்களை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று சொல்லி செங்கோட்டையனை தூக்கி வைத்துக்கொண்டு எடப்பாடியை விரட்டி விடுவது தான் அவர்களின் திட்டமாகும். அதற்கான சமிக்ஞைகள் எல்லாம் தற்போது தெரிகிறது. அதனால் தான், அமித்ஷா, எதிர்வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொல்கிறார். 3 சதவீத வாக்குகளை கூட கொண்டிருக்காத பாஜக, அதிமுகவில் முதலமைச்சர் யார் என்று முடிவு செய்வார்களாம். எனவே எடப்பாடி பழனிசாமி இவர்களை எதிர்த்து கடுமையாக போராடுவார். கடைசி வரை இவர்களை வெற்றிபெற விட மாட்டார். ஒரு கட்டத்தில் பாஜகவினர் தன்னை ஒழித்துகட்டி விடுவார்கள் என்று நினைத்தார் என்றால்? பாஜகவை மனித வெடிகுண்டு போல அழித்துவிட்டு, அவர்களை தமிழ்நாட்டில் தலை தூக்க விடாமல் செய்துவிடுவார் என்று எடப்பாடி வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. இந்த சண்டையில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கும் வரை இந்த சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். கடைசியில் யார் வென்றார்கள் என்பது தேர்தலுக்கு முன்னதாகவே தெரிந்துவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.