அண்ணாமலை இருக்கின்ற வரை திமுகவுக்கு சாதகம் என்றும், அதிமுக – பாஜக கூட்டணியை தோற்கடிக்கும் வேலையை திமுகவை விட அண்ணாமலை சிறப்பாக செய்வார் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுபயணம் மற்றும் ராமதாஸ் – செல்வப்பெருந்தகை சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். பாஜகவுக்கு பதில் சொல்லாமல் இருப்பதன் மூலம் இந்த நெருக்கடியில் இருந்து தப்பிவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். ஆனால் அப்படி தப்பிவிட முடியாது. ஹெச்.ராஜா, தேர்தலுக்கு பிறகு பாஜக நாடாளுமன்றக்குழு தான் யார் முதலமைச்சர் என்று முடிவு செய்யும் என்று சொல்கிறார். எவ்வளவு பெரிய ஆணவம். தமிழ்நாட்டில் பாஜக தனியாக நின்று ஒரு கவுன்சிலர் சீட்டு ஜெயிக்க முடியாது. 30 வருஷம் தமிழ்நாட்டை ஆண்ட, குறைந்தபட்சம் 20 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருக்கின்ற கட்சியை பார்த்து யார் முதலமைச்சர் என்று பாஜக நாடாளுமன்றக்குழு முடிவு செய்யும் என்றால் எவ்வளவு ஆணவமான பேச்சு. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் எப்படி அதிமுகவில் உள்ள அனைவரும் மௌனமாக வாயை பொத்திக்கொண்டு இருக்கிறார்கள்?
திமுக அரசுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு அலை உள்ளது. இன்னும் 6 மாதத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஒன்றுடன் ஒன்று ஜெல் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. பாஜக பெரிய தவறுகளை செய்யாமல் இருக்கும் வரை. சராசரி அதிமுக வாக்காளர்களின் எதிரி திமுக தான். தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு எதிராக பாஜக என்ன அட்டூழியங்களை செய்தாலும், அவர்களின் இலக்கு என்பது திமுக வரக்கூடாது என்பதுதான். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய 11 தேர்தல்களில், இரண்டு தேர்தல்களில் தான் திமுகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்து இருக்கிறது. 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசாங்கம் அமைந்தது. இந்த 54 வருடத்தில் திமுக ஒருமுறை கூட தொடர்ந்து 2-வது முறை ஆட்சிக்கு வந்தது கிடையாது. பாஜகவை ஆயிரம்தான் விமர்சித்தாலும், தேர்தல் நேரத்தில் சற்று ஒழுங்காக இருந்தார்கள் என்றால் இங்கு ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஆனால் அண்ணாமலை இருக்கின்ற வரை திமுகவுக்கு சாதகம். ஏனென்றால் அதிமுக – பாஜக கூட்டணியை தோற்கடிக்கும் வேலையை திமுகவை விட அண்ணாமலை சிறப்பாக செய்வார். திமுகவின் மிகப்பெரிய பலம், அண்ணாமலை. 2026 வரை அவர் தமிழ்நாட்டிலேயே இருப்பார் என்றால் இந்த கூட்டணியை உடைக்கும் வேலையை அவர் செவ்வனே செய்து முடிப்பார்.
சராசரி அதிமுக வாக்கு வங்கி என்பது, கட்சி எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் 90 சதவீதம் திமுகவுக்கு போடாது. திமுகவோ, அதிமுகவோ தங்களுடைய கட்சியின் சொந்த வாக்கு வங்கியால் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள். கட்சி சாராதவர்களால் கிடைக்கும் வாக்குகளால் தான் வெற்றி பெறுவார்கள். அதனால் திமுகவுக்கு சாதகம் இல்லை. அவர்கள் பெரிதும் நம்பி இருப்பது அண்ணாமலை, அமித்ஷாவின் பேச்சை நம்பிதான். அது இருக்கும் வரை திமுகவுக்கு சாதகம்தான். 2026 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது தான் பாஜகவின் முதன்மையான நோக்கமாக உள்ளது. பாஜக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க பார்க்கிறது. திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளையும் ஒரே நேரத்தில் அழிக்கப்பார்க்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தாலும் அவர்களிடம் பெரும்பான்மை இல்லை என்றால்? அது பாஜகவுக்கு சாதகமாகும். அடுத்த 3 வருஷயத்துக்கு அவர்கள் சலாம் போடுவார்கள். 2026ல் திமுக வெற்றி பெறும்பட்சத்தில் பாஜக எதிர்ப்பு இந்த அளவுக்கு இருக்காது.
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் செல்வப்பெருந்தகை சந்தித்துள்ளதன் மூலம் பாமக, விசிக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரே கூட்டணியில் கொண்டுவர முயற்சிப்பதாக தெரிகிறது. திமுக தலைமையின் ஆசிர்வாதம் இல்லாமல் செல்வப்பெருந்தகை போயிருக்க மாட்டார். அப்படி கூட்டணி அமைந்தால் வாக்குகள் டிரான்ஸ்பர் ஆகாது. திமுக கடும் பின்னடைவை சந்திக்கும். திமுக கூட்டணியில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஸ்டாலின்தான். ஸ்டாலினுக்கு பிடிக்காமல் செல்வப்பெருந்தகை போயிருக்க மாட்டார். இது திருமாவுக்கு கொடுக்கும் எச்சரிக்கையாகும். இதன் மூலம் விசிகவின் பேரம் பேசும் வலிமையை குறைக்கிறார்கள். விசிகவுக்கு திமுக கூட்டணியை விட்டால் வேறு கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு கிடையாது. விஜய் கட்சி, மற்றொரு மக்கள்நல கூட்டணி ஆகும். அவர் அதிமுக கூட்டணிக்கு சென்றால், ஏதேனும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது அங்கேயும் போக முடியாது. ஏனென்றால் அங்கே பாஜக இருக்கிறது. அதுதான் தற்போது இருக்கும் சிக்கலாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.