spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநிறுத்தப்பட்ட நீயா? நானா? விஜய் டிவியில் நடந்தது என்ன? பின்னணியை உடைக்கும் செந்தில்வேல்!

நிறுத்தப்பட்ட நீயா? நானா? விஜய் டிவியில் நடந்தது என்ன? பின்னணியை உடைக்கும் செந்தில்வேல்!

-

- Advertisement -

மும்மொழி கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியை வெளியிட பாஜகவுக்கு ஏன் இவ்வளவு அச்சம்? என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார். நாடே மும்மொழி கொள்கையை விரும்புகிறது என்றால், அதுகுறித்த விவாதத்தை நடுநிலையுடன் மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

senthilvel new
senthilvel new

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதம் நிறுத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- விஜய் தொலைக்காட்சியில் வாரம்தோறும் நீயா? நானா? விவாத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த வாரத்திற்கான விவாத நிகழ்ச்சி மும்மொழி கொள்கை பற்றிய தலைப்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாமலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் விவாத நிகழ்ச்சியை நடத்துக்கூடிய நெறியாளர் கோபி மீதோ, நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் மீது விமர்சனம் வைப்பதோ, வருத்தப்படுவதோ சரியானது அல்ல. அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் கோபிநாத்,  அறத்தின் பக்கம் நின்று தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த பார்வையுடன், யாருடைய மனதையும் புண் படுத்தாமல் தான் சொல்ல வந்த கருத்துக்களை தெளிவாக சொல்பவர். நீயா நானா நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விவகாரத்தில் கோபிநாத் மீது பலரும் வருத்தப்படுவார்கள். அப்படி அவர் மீது வருத்தம் கொள்வதற்கு எதுவும் இல்லை. அப்போது நெறியாளர் கோபிநாத்தை மிரட்டியதா பாஜக என்றால்? அதற்கு பின்னால் நடந்த சில முக்கியமான விஷயங்களை சொல்கிறேன்.

we-r-hiring

என்ன நடைபெற்றுள்ளது என்றால்? இந்த விவாத நிகழ்ச்சியில் பாஜகவின் சார்பில் சிலர் கலந்து கொள்கிறார்கள். ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் அன்பை பெற்றவர் ஆனந்தன் அய்யசாமி. தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவராக வாய்ப்பு உள்ள நபராக கருதப்படுபவர் இவர். தென்காசி அருகில் உள்ள வாசுதேவ நல்லூரை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி, மென்பொருள் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த விவாத நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்றதாக நிகழ்ச்சிக்கு சென்ற சிலர் தெரிவிக்கின்றனர். ஆனந்தன் அய்யாசாமி, பாஜகவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்அப் பிரிவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின்போது போட்டியிடுவார் என்றும் பெயர் அடிபட்டது.

இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பங்கேற்ற ஆனந்தன் அய்யாசாமி தரப்பினரிடம், அதற்கு எதிராக வைக்கப்பட்ட எந்த லாஜிக் ஆன கேள்விக்கும் பதில் தரவில்லை என தெரிகிறது.இந்த விவாத நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில், இரு தரப்பினருக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது கட்சி சார்ந்தோ, அல்லது கட்சி அடிப்படையிலேயோ மும்மொழி கொள்கை தொடர்பான கருத்துக்களை பேசக் கூடாது. மும்மொழி கொள்கை தேவையா? இல்லையா? என்பதை லாஜிக் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரு மொழி கொள்கைக்கு ஆதரவாக வைக்கப்பட்ட வாதங்கள், எதற்கும் இந்தி ஆதரவாளர்களால் பதில் அளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

நீயா? நானா? நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள பல கோடி பேர் பார்க்கக்கூடிய ஒரு புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த விவாதம் அப்படியே ஒளிபரப்பாகினால் மக்கள் மத்தியில் மும்மொழி கொள்கை குறித்த சரியான புரிதல் ஏற்பட்டு விடும். நீயா? நானா?வில் இதற்கு முன்னதாக தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி குறித்த விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வடஇந்தியாவில் இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசியது ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தமிழ்நாட்டின் பல்வேறு சாதனைகள் உலகம் முழுவதும் போய் சேர்ந்தது. அதுபோல இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது போது, மும்மொழி கொள்கைக்கு எதிரான நியாயமான வாதங்கள் மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக எழுப்பப்பட்ட நியாயமான கேள்விகளுக்கு, மும்மொழி ஆதரவாளர்கள் பதில் அளிக்காததையும் வைத்து பார்த்தால் மக்கள் உண்மையை புரிந்துகொள்வார்கள்.

விவாத நிகழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் என்னுடைய யூகம் என்ன என்றால்? ஸ்ரீதர்வேம்பு வாயிலாக விஜய் டிவியின் உரிமையாளரான ஜியோ நிறுவனத்திற்கு அழுத்தம் தரப்பட்டிருக்கலாம் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த புள்ளிகளை இணைத்து பார்த்தோம் என்றால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஊடகவியலாளராக சந்தேகம் கொள்கிறேன். நம்முடைய கேள்வி என்ன என்றால் ஒரு நிகழ்ச்சியை வெளியிட ஏன் இவ்வளவு அச்சம்? நாடே மும்மொழி கொள்கையை விரும்புகிறது. மக்கள் மும்மொழி கொள்கையை விரும்புகிறார்கள் என்றுதானே சொன்னார்கள். அப்படி உண்மையிலேயே மக்கள் மும்மொழி கொள்கையை விரும்புகிறார்கள் என்றால், அது குறித்த விவாதத்தை நடுநிலையுடன் மக்கள் மத்தியில் வையுங்கள். மக்கள் நிகழ்ச்சியை பார்த்து முடிவு செய்துகொள்ளட்டும். அது உங்களால் முடியாது.

நாங்கள் ஊடகத்தில் இருந்தபோது என்ன விதமான நெருக்கடிகளை சந்தித்தோம். ஊடக முதலாளிகளுக்கு பாஜக அழுத்தம் கொடுத்தது. 2014ஆம் ஆண்டிற்கு முன்பு அப்படி இல்லை. நாங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரசை எதிர்த்து கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் ஒவ்வொரு நாளும் விவாதத்திற்கு வந்து செல்லும்போது எல்லாம் பிரச்சினை. மறுநாள் அலுவலகத்திற்கு மெயில் வரும். கடிதம் வரும். ஒரு கட்டத்திற்கு மேல் உரிமையாளரிடம் வேலையில் இருந்து நீக்க வற்புறுத்துவார்கள். எதிர் அணியில் இருந்து யாரை கூப்பிட வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு அவர்களது தலையீடு அதிகரித்தது. தற்போது உள்ள நெறியாளர்களுக்கும் அந்த அழுத்தம் தரப்படுகிறது. தற்போது தொலைக்காட்சிகளில் விவாதங்களை நடத்தக்கூடிய நெறியாளர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு நடுநிலையோடு தான் கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஆனால் கடுமையான மிரட்டல்களை கொடுக்கிறார்கள். தற்போது அது விஜய்டிவி வரைக்கும் சென்று நின்றுவிட்டது. இப்படி இருந்தால் ஜனநாயகம் எங்கே போய் நிற்கும். இதுவரை செய்தி ஊடகங்களை மிரட்டிய பாஜக, இப்போது விஜய் தொலைக்காட்சி மற்றும்  நீயா? நானா? நிகழ்ச்சி உள்ளிட்டவற்றையும்  மிரட்டும் போக்கை கையில் எடுத்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ