spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை ஒப்புக்கொண்ட பாஜக! அடுத்து என்ன? வல்லம் பஷீர் நேர்காணல்!

தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை ஒப்புக்கொண்ட பாஜக! அடுத்து என்ன? வல்லம் பஷீர் நேர்காணல்!

-

- Advertisement -

எதிர்க்கட்சி தலைவர்கள் தொகுதிகளில் போலி வாக்குகள் பதிவாகி உள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜக எம்.பி., அனுராக் தாக்கூர், ரேபரேலி, வயநாடு, கொளத்தூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் போலி வாக்குகள் பதிவாகி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். வாக்கு மோசடி விவகாரத்தை ராகுல்காந்தி கையில் எடுத்து அம்பலப்படுத்தியது, தேர்தல் ஆணையம் எப்படி பாழ்பட்டு கிடக்கிறது என்று நாட்டு மக்களிடம் சொல்வதற்காக தான். தற்போது அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டின் மூலம் தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக ராகுல்காந்தி ஆதாரப்பூர்வமாக வெளியிட்டார். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடந்துள்ளதை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டால், அங்கேயும் தேர்தலை ரத்து செய்துவிடலாம்.

தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யாத பிரதமர் மோடி, இங்கே வந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்குகளை கேட்கிறார் என்றால் அதுதான் ஜனநாயகத்தின் விழுமியம் என்று நினைக்கிறேன். இங்கே தேர்தல் ஆணையம் எப்படி இயங்குகிறது என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. நீதிமன்றத்தில் போய் தேர்தல் ஆணையம் சொல்கிறது, 65 லட்சம் பேரை ஏன் நீக்கினேன் என்று சொல்லமாட்டேன் என்று. 6 பேர் உயிருடன் இல்லை என்று நீக்கியதாக ஒரு செய்தி. அவர்கள் 6 பேரையும் ராகுல்காந்தி சந்தித்து, அவர்களுடன் டீ சாப்பிடுகிறார். இவற்றை எல்லாம் ராகுல்காந்தி வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார். பாஜக அதேபோல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய நடைமுறையை மத்திய அரசு ஏன் கைவிட்டது? அதற்கு பின்னால் இருந்த அரசியல் நோக்கம் என்ன? என பலரும் வெளிப்படையாக பேசியுள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தேர்தல் ஆணையர் தனது விருப்பத்தின் பேரில் வெளியேறினார் என்கிற செய்தி வந்தது. சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் எப்படி முடிவுகளை மாற்றினார்கள் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிந்து கொண்டோம். நீதிமன்றம் தலையிட்டுதான் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். இந்த அளவுக்கு தேர்தல் ஆணையத்தை கையில் எடுத்துக்கொண்டது பாஜக. சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இதுவரை இப்படி பாழ்பட்டு போனது இல்லை. ராகுல்காந்தி, நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் நானே களத்தில் இறங்கி முறைகேடுகளை கண்டுபிடித்தேன் என்று சொல்கிறார்.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

தேர்தல் ஆணையம் என்பது மக்களுக்கான ஒரு அமைப்பாகும். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது ஒன்றுதான் அவர்களின் கடமையாகும். இவைகள் எல்லாம் செயல்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்கிற சூழலை ஏற்படுத்தி விட்டு, பாஜகவுக்கு மட்டும்தான் நாங்கள் வேலை செய்வோம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். இந்த முறைகேடுகளுக்கு பின்னால் பாஜக உள்ளது. இது ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டு விட்டது. தற்போது எதிர்க்கட்சிகளும் முறைகேடுகள் செய்தன எனறு சொல்லி அவர்கள் பக்கம் பந்துகளை தள்ளி விடுகின்றனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமானவர்களா என்று கேட்கிறீர்கள்.

மோசடி செய்து அவர்கள் அதிகாரத்திற்கு வந்து இருந்தாலும் தவறுதான். தேர்தல் மோசடிகள் ஜனநாயகத்திற்கு கேடு என்று நினைக்கிறோம். யார் வேண்டுமானாலும் இதை செய்ய முடியும் என்றால் நாளைக்கு தேர்தல் எதற்கு?  கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோசடி செய்து வெற்றி பெற்றார் என்று சொல்வதை நான் நம்புகிறேன். பாஜகவை ஆதாரத்தை கொடுக்க சொல்லுங்கள். ஆதாரம் இல்லாமல் அவர்கள் போகிற போக்கில் வைக்கின்ற குற்றச்சாட்டு என்பது, அவர்களுக்கு தெரியாமலேயே தேர்தல் ஆணையத்தை சிதலமடைய செய்துவிட்டோம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

SIR என்கிற செயல்திட்டத்தின் கீழ் வாக்காளர்களை நீக்குகிறார்கள். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மொத்தமுள்ள இஸ்லாமியர்களையும் நீக்கினார்கள். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள், தலித் பிரிவினரை நீக்கியுள்ளனர். தேர்தல் ஆணையம் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்களை குறிவைத்து நீக்குகிறார்கள். அதற்குள் இருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது. பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு இரண்டு வாக்குகள் உள்ளன என்று சொல்லி அவருடைய வாக்கை நீக்கினார்கள். அதேபோல், பீகார் துணை முதலமைச்சருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கும்போது அதை நீக்காதது ஏன்?

நீதிமன்றத்தையே நம்பிக் கொண்டிருப்பதால் தேர்தல் ஆணையத்தை முற்றிலும் நிறுத்திவிட முடியாது. தற்போதுள்ள தேர்தல் ஆணையம் பாழ்பட்டு போய்விட்ட நிலையில் புதிய தேர்தல் ஆணையம் கொண்டுவரப்பட வேண்டும். 65 லட்சம் பேரை நீக்கியுள்ள எஸ்.ஐ.ஆர் முறையை முதலில் நீக்க வேண்டும். அதை எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும். பேரணி செல்வது, தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதும், இது இன்னும் மக்கள் திரட்சியாக ராகுல்காந்தி அணி திரட்டவில்லை என்று தோன்றுகிறது.

உண்மையில் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று ராகுல்காந்தி மட்டும் காங்கரசில் போராடுகிறார். தேர்தல் ஆணையத்திற்கு கடிவாளம் போடுகிற இடத்தில் இரண்டு பேர் உள்ளனர். ஒன்று அவர்களை நியமிக்கின்ற பிரதமர். மற்றொன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி. அவர் சாந்திருக்கும் காங்கிரஸ் கட்சி என்ன செய்கிறது?. ஜனநாயகத்தில் நீதிமன்றத்தை நம்பிதான் ஆக வேண்டும். அதனால் நீதிமன்றத்திற்கு முழுமையான ஆவணங்களை கொண்டுசேர்த்திட வேண்டும். அடுத்தக்கட்டமாக அனைத்துக்கட்சிகளையும் திரட்டி, இதன் வாயிலாக தேர்தல் ஆணையம் என் செய்திருக்கிறது என்பதை இன்னும் கூரிய முறையில் நாட்டு மகக்ளுக்கு அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை தாண்டி அடுத்தகட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தான் முடிவு எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

MUST READ