அதிமுக உடன் தவெக கூட்டணிக்கு செல்லாது என்று நிர்மல்குமார் அறிவித்துள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.


அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகையாளர் புன்னைவளவன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- நிர்மல்குமார் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று சொன்ன உடன் கோட்டையை பிடிக்கிற அவருடைய கனவுக்கோட்டை தகர்ந்துவிட்டது. இதன் மூலம் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் தவெக கரியை பூசியுள்ளது. தவெக தரப்பில், அந்த கட்சியின் தலைவர் விஜய் பதில் சொல்லப் போவது இல்லை. ஆனந்த் வழக்கு விவகாரங்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, தவெகவில் 4வது இடத்தில் இருக்கும் நிர்மல்குமார், நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு என்ன கருத்து சொன்னமோ அதில் உறுதியாக இருக்கிறோம் என்று சொல்கிறார். பல்வேறு பிரச்சாரங்களில் பேசிய விஜய், தவெக அதிமுக உடன் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்று சொன்னார். விஜயை, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்கள். சட்டப்பேரவையில் எடப்பாடி, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள். அவர்களுடைய நோக்கம் தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவருவது தான். அதை நோக்கிய பயணத்தில் தற்போது ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றொரு மாற்றுத் திட்டத்தையும் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறார். விஜய், அதிமுக கூட்டணிக்கு வராமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது. எனவே பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலையை அதிமுக தரப்பில் தொடங்கியுள்ளனர். சி.வி.சண்முகத்தின் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் சில விஷயங்கள் பேசப் பட்டிருக்கிறது. கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டிருக்கிறது. பாமகவிடம் சுமூகமாக பேசி கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் முயற்சித்து வருகிறார்கள். அதேபோல், பாஜக தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லி மேலிடத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாஜக தரப்பில் இந்த வேளைகளை பார்க்கும்படி ஆடிட்டர் குருமூர்த்தியிடம் சொல்லப்பட்டதாகவும், அவர் அதற்கான களப்பணிகளை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தவெக தரப்பில் ஒரு மாத மௌனத்தை கலைத்து மீண்டும் அரசியல் செயல்பாட்டிற்கு வந்துவிட்டனர். முதலில் நெல்கொள்முதல் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் பொருளாளர் வெங்கட்ராமனின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே மாமல்லபுரம் ஓட்டலில் அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்க வைத்தனர். வெங்கட்ராமனை, கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கான வேலைகளை விஜய் உடன் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள். காரணம் தன்னிடம் ஆடிட்டராக இருந்தவரை தான் விஜய் பொருளாளராக நியமித்தார். அந்த நெருக்கத்தை பயன்படுத்தி வெங்கட்ராமன் இன்னும் கட்சியில் செல்வாக்கு படைத்தவராக மாறிவிடக்கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்த நிர்வாகக்குழுவில் இஸ்லாமியர்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா? என்கிற விவரம் தெரியவில்லை. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், கூட்டணி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். தொடர்பாக திமுக கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தவெக வெளியில் இருந்து எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பது என்றால்? பாஜக, அதிமுகவையும் தான் எதிர்க்க வேண்டி வரும். விஜய் தேர்தல் ஆணையத்தை மட்டும் எதிர்க்க போகிறாரா? அல்லது எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கும் பாஜக, அதிமுகவை எதிர்க்கப் போகிறாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


