வில்லவன் இராமதாஸ்
மேலை நாடுகளிலிருந்து துரத்தப்படும் இந்தியர்கள். ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும்…
அமெரிக்காவிலிருந்து கை கால்களில் விலங் கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட செய்தி பலதரப்பு ஊடகங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றது. ஆண்டவன் கட்டளையை அப்படியே ஏற்ற ஆழ்வார்கள், நாயன்மார்களைப் போல, மோடி அரசு அமெரிக்காவின் இந்தச் செயலை ஏற்றுக் கொண்டது. நண்டு சிண்டு நாடுகள் கூட தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து ஓரளவு வெற்றி கண்ட ஒரு பிரச்சனையில் இந்தியா மெல்லிய முனகலைக்கூட வெளிப்படுத்த வில்லை. இந்தியக் குடிமக்கள் அவமரியாதை செய்யப்பட்டது குறித்து கவலைப்பட வில்லையே தவிர அவர்கள் டெல்லியில் தரை இறங்கி அது மோடிக்கு அவமானம் ஆகி விடக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு உறுதியாக இருந்திருக்கிறது.அமெரிக்கா 104 பேரை ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய பிறகுதான், வட இந்தியாவில் இருந்து மக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேற்றும் கம்பெனிகள் இயங்கும் செய்தி பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரிய வந்தது. வசதி இல்லாத வட இந்திய ஏழைகள் தென்னிந்தியாவிற்கு பிழைப்பு தேடி செல்வதைப் போல ஓரளவு வசதி உள்ள வட இந்திய மக்கள், பிழைப்பு தேடி குறைந்தபட்சம் 50 லட்சம் முதல் அதிகபட்சம் ஒன்றேகால் கோடி வரை செலவிட்டு அமெரிக்கா செல்கிறார்கள்.
குறைந்தபட்சம் 50 லட்சம் என்பதால் அது சொகுசான பயணமாக இருக்கும் என கற்பனை செய்துவிட வேண்டாம். இந்த சட்டவிரோதக் குடியேற்றத்திற்கான பயணத்தில் பலநூறு கிலாமீட்டர் கால்நடையாகச் செல்ல வேண்டும். எலும்புவரை ஊடுருவும் பனிப் பிரதேசத்தில் நடந்து செல்லவேண்டிய ஊடுருவல் பாதைகள் இருக்கின்றன.தென் அமெரிக்காவில் இருந்து நடந்து செல்லும் டாங்கி ரூட் ஆனது வழிப்பறி, பாலியல் வன்புணர்ச்சி, கொலை எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும் காட்டுப்பகுதி என பயணித்தவர்கள் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.வடஇந்தியாவில் இருந்து சட்டவிரோதமாகக் குடிபெயர்வோர் தங்கள் குழந்தைகளையும் இத்தகைய ஆபத்தான பயண வழிகளில் கூட்டிச்செல்கிறார்கள் என்பதில் இருந்தே அவர்களது அமெரிக்க மோகத்தின் வீச்சை உணர்ந்து கொள்ளலாம். மோடி, இந்தியாவை உலகின் சூப்பர் பவராக மாற்றிய பிறகும் இவர்கள் தங்கள் சொத்துகளை அடகு வைத்தும் உயிரைப் பணயம் வைத்தும் இந்தப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். யாரோ ஒன்று இரண்டு பேர் அல்ல, லட்சக்கணக்கான மக்கள் இந்த ரிஸ்க்கை எடுக்கிறார்கள்.
அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் பெரிய அளவிலான அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு 600 சட்ட விரோதக் குடியேறிகளைக் கைது செய்திருக்கிறது. உணவகங்கள் சிறுகடைகள் போன்ற சட்டவிரோதக் குடியேறிகள் பணியாற்ற வாய்ப்புள்ள இடங்களைக் குறிவைத்து இந்தக் சோதனை நிகழ்ந்திருக்கிறது. இதனை மேலும் பல நாடுகள் முன்னெடுக்கக் கூடும்.
குஜராத், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து கள்ளத்தனமான வழிகளில் மேலை நாடுகளுக்குக் குடிபெயர்வோர் இதுபோன்ற சிறிய வணிக நிறுவனங்களில் வேலை செய்வதற்கே செல்கிறார்கள். அதிரடி ரெய்டுகள் இத்தகைய இடங்களில் நடக்கும் போது, வட இந்தியாவில் இருந்து குடிபெயரும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் சிக்குவார்கள். அதிகப்படியான குடியேற்ற மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என குற்றம்சாட்டி பஞ்சாப், ஹரியானா, உ.பி. , ஜம்மு – காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களை ஏற்க மாட்டோம் என ஏற்கெனவே ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.இதில் நாம் கவனிக்க வேண்டிய நற்செய்தி என்னவெனில், தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து இத்தகைய சட்ட விரோதக் குடியேற்றங்கள் ஒப்பீட்டளவில் பூஜ்ஜியம். இங்கிருந்து அமெரிக்கா ஐரோப்பாவுக்குச் செல்பவர்கள் உரிய கல்வித் தகுதியோடு தகுந்த ஆவணங்களோடு செல்பவர்கள். ஆகவே இந்த நாடுகடத்தல் நடவடிக்கை தென்னிந்தியர்களை பாதிப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
இப்போது கெட்ட செய்திகளின் பட்டியலுக்கு வரலாம்,
இந்தியப் பொருளாதாரத்தில் வெளிநாட்டில் வேலை செய்வோர் அனுப்பும் பணம் சுமார் 111 பில்லியன் டாலர்கள். வெளிநாடுகளில் பணியாற்றுவோர் அனுப்பும் பணத்தில் இந்தியர்கள் அனுப்புவதே உலக அளவில் அதிக பட்சமானது. சட்டவிரோதக் குடியேறிகள் அனுப்பும் பணமும் இதில் அடக்கம். அவர்களால் அங்கு சேமிக்கமுடியாது என்பதால் வருமானத்தில் பெருமளவு பணத்தை இந்தியாவிற்கு அனுப்புவார்கள்.
அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொடங்கியிருக்கும் தீவிரமான ரெய்டு நடவடிக்கைகள் காரணமாக ஆவணங்களே இல்லாமல் குடிபெயர்ந்தோர் வேலையில் இருந்து இனி விலக்கப்படுவார்கள். எனவே குறிப்பிட்ட அளவுக்கான வெளிநாட்டுப் பணம் இந்தியா வருவது நின்று போகும். ஏற்கெனவே அந்நியச் செலாவணி நாட்டில் இருந்து ஏராளமாக வெளியேறியபடி இருக்கிறது. கூடுதலாக குடிசைத் தொழில் போல நடந்து வந்த சட்டவிரோதக் குடியேறி வியாபாரம் வடஇந்தியாவில் காலாவதி ஆகும். ஒரு நபரை அனுப்ப 40 லட்சம் முதல் ஒரு கோடிவரை வசூலிக்கப்பட்டது. அப்படி என்றால் இந்த வியாபாரத்தின் பிரம்மாண்டத்தை நீங்களே கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளலாம்.ஆவணங்கள் இல்லாமல் குடியேறுவதை ஊக்குவிப்பது வெளிநாடுகளில் உள்ள சிறு தொழில் செய்யும் மார்வாடிகள் போன்ற இந்திய வணிகப் பிரிவினர். இவர்கள் மலிவான கூலிக்கு ஆட்களை வைத்து ஈட்டிய லாபம் இனி கேள்விக்குள்ளாகும் அல்லது குறையும். முன்னேறிய நாடுகளில் பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை இயல்பாகவே பிற நாட்டிலிருந்து குடியேறுவோர் மீதான வெறுப்பாக மாறும். சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறி இருக்கிறார்கள் எனும் செய்தி பரவலாகும்போது முறையாகக் குடிபெயர்ந்த மக்களும் அந்த வெறுப்புக்கு முகம் கொடுக்க நேரிடும். அமெரிக்காவில் மட்டும் எட்டு முதல் 11 லட்சம் வரையிலான இந்தியர்கள் குடியேறி இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நான் தென்னிந்தியக்காரன் என்றோ சட்டப்படி குடியேறியவன் என்றோ கழுத்தில் அட்டை மாட்டிக் கொண்டு யாராலும் சுற்ற முடியாது. அந்த வெறுப்பை இந்திய முகம் கொண்ட ஒவ்வொருவனும் எதிர்கொள்ள நேரிடலாம்.
இனி வெளிநாடுகளில் விசா கட்டுப்பாடுகள் தீவிரமாகும். புதிதாக வெளிநாட்டுப் பணிக்குச் செல்ல முயற்சி செய்வோர் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இப்போதே அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் போலீசின் தொடர் சோதனைகளுக்கு ஆளாகிறார்கள். கண்ணில் படும் இந்திய முகங்கள் எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு அமெரிக்க போலீஸ் பார்க்கிறது என மோடி பஜனையில் முன்னணியில் இருக்கும் ஊடகங்கள் புலம்பி இருக்கின்றன. இந்திய பாஸ்போர்ட் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிழந்து கொண்டு வருகிறது. ஜிடிபி மதிப்பில் ஏழாவது இடத்தில் இருக்கும் இந்தியா, பாஸ்போர்ட் மதிப்பீட்டில் 85வது இடத்தில் இருக்கிறது. இந்தியப் பயணிகள் பலர் உலக அளவில் தாம் அவமதிக்கப்படுவதையும் கடுமையான சந்தேகத்திற்கு ஆட்படுவதையும் தொடர்ந்து பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் குடியேறும் நாடுகள் மட்டுமல்ல, அந்த நாட்டை அடைவதற்கான வழியில் உள்ள நாடுகளும் தங்கள் விசா விதிகளை இறுக்கமாக்கத் துவங்கியிருக்கின்றன.இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தை வேகமாகச் சுருங்கி வரும் வேளையில் உலகளாவிய வேலை வாய்ப்புகள்தான் இந்திய நடுத்தர வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க நம்பிக்கையாக இருந்து வந்தது. ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளிலும் சுமார் 31 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி. பிறப்புவிகிதம் குறைந்து வருவதால் ஜப்பான் போன்ற நாடுகள் வெளிநாட்டுப் பணி யாளர்களை அதிகம் நம்பி இருக்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில் இந்தியப் பணியாளர்கள் மீதான வெறுப்பும் அவநம்பிக்கையும் நடுத்தர வர்க்கத்தின் இறுதி நம்பிக்கையான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே இந்திய நடுத்தர வர்க்கம் தனது கனவிலிருந்து வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. குறைந்தபட்சம் தங்கள் டவுசரை இறுக்கிப் பிடித்தபடி கனவு காணவாவது முயற்சி செய்யலாம். மோடி அரசுக்கு இருக்கும் நெருக்கடிக்கு உங்கள் டவுசர் மீது கூட அவர்களால் கருணை காட்ட முடியாது.
40 மணி நேரம் கை, கால்களை கட்டி… அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் வேதனை கதை…!