ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு!
1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆவடி மாநாட்டிற்கு யு.என்.தேபர் தலைமை தாங்கினார். ஆவடி அருகே பத்து ஏக்ககருக்கும் அதிகமான விவசாய நிலங்களை திருத்தி அமைக்கப்பட்ட மாநாட்டு பந்தலுக்கு சத்தியமூர்த்தி திடல் என்று காமராஜர் பெயர் சூட்டினார். அதுவே தற்போது திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் என்று அழைக்கப்படுகிறது.
அந்த மாநாட்டின் அனைத்து பொறுப்புகளையும் முதலமைச்சர் காமராஜ் அவர்களே ஏற்றிருந்தார். மக்களின் மீதும் தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்த காமராஜரை எல்லோரும் சேர்ந்து அவரை ‘‘தலைவர்’’ என்றே அழைத்தனர். தலைவர் காமராஜர் முதலமைச்சர் ஆன பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற முதல் அகில இந்திய மாநாடு இதுவே என்பதால் அந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று தலைவர் காமராஜர் பெரிதும் விரும்பினார்.
அதற்காக டி.டி.எஸ் தொழில் நிர்வாகத்தைச் சேர்ந்த டி.எஸ்.கிருஷ்ணா, ‘‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ நிறுவன உரிமையாளர் இராம் நாத் கோயங்கா, தஞ்சை மாவட்ட மிராசுதாரர் வி.எஸ்.தியாகராஜ முதலியார் ஆகிய மூவர் குழுவை அமைத்து, அவர்களிடம் மாநாடு நடத்தும் பொறுப்புகளை ஒப்படைத்தார்.அதேபோல் ஜெமினி ஸ்டுடியோ உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன், மாநாட்டின் அலங்காரப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
அன்றைய காலக்கட்டத்தில் ஆவடி மாநாட்டின் அலங்காரத்தைப் பார்த்தவர்கள், அதுவரை எவரும் காணாத முறையில் அந்த மாநாடு அமைந்திருக்கிறது என்று சொன்னது மட்டுமல்ல அந்த மாநாடு முடிந்து 25 ஆண்டுகள் கழித்தும் அதுபோன்ற மாநாட்டின் அழகை எவரும் பார்க்கவில்லை என்று எல்லோரும் கூறினார்கள். அந்த பாராட்டைத்தான் எஸ்.எஸ்.வாசனிடம் தலைவர் காமராஜரும் எதிர்பார்த்திருந்தார்.
1951ல் புதுடெல்லியில் பிரதமர் நேரு தலைமையில் மாநாடு நடைபெற்றது. 1953ல் ஐதராபாத்தில் நேரு தலைமையில் நடைபெற்றது. 1954ல் மேற்குவங்கம், கல்யாணி நகரில் நடைபெற்ற மாநாட்டில் மீண்டும் நேரு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1955 ஜனவரியில் சென்னை ஆவடியில் நடைபெற்ற மாநாடு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
அதுவரை பணக்காரர்களின் கட்சியாகவும், மிட்டாமிராசு தாரர்களின் பாதுகாப்பு கவசமாக இருந்து வந்த காங்கிராஸ் கட்சி வரலாற்றில் முதன்முறையாக சமதர்ம சோசலிஸ ஜனநாயகத்தை பற்றி நேரு பேசினார். சமதர்மம் என்பது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு எப்போதும் கசப்பு மருந்தாக இருந்து வரும் சூழலில் அதுகுறித்து நேரு பேசினால் மட்டும் இனிக்கவா செய்யும்.
ஏழை பணக்காரர் என்கிற ஏற்றத்தாழ்வற்ற ஜனநாயக சோசலிஸத்திற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று காமராஜரின் குரலாகவே நேரு முழங்கினார். ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் நேரு பேசிய பேச்சு உலகம் முழுவதும் பெரும் விவாகத்தை ஏற்படுத்தியது. ரஷ்யா புரட்சியாளர் லெனின் வழியில் இந்தியா பிரதமர் நேரு பயணம் செய்ய தொடங்கிவிட்டார் என்று உலகம் முழுவதும் விவாதித்தார்கள்.
மாநாட்டிற்கு பின்னர் தலைவர் காமராஜரின் சிந்தனையும் பிரதமர் நேருவின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தது. மேல்தட்டு மக்களுக்காக இயங்கி வந்த அரசு முதன்முறையாக சாதரண மக்களின் வறுமையை பற்றி பேசத்தொடங்கியது. உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் இந்தியாவை திரும்பி பார்க்க தொடங்கியது.
அதேபோல் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஆவடியை நோக்கி வரத்தொடங்கியது. ஆவடி மக்களின் பொருளாதார நிலையும் நாளுக்கு நாள் உயரத் தொடங்கியது. அதன் உள் கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. இன்று பன்முகம் தன்மை கொண்ட ஒரு மினி இந்தியாவாக வளர்ந்து நிற்கிறது.
-என்.கே.மூர்த்தி